கோவை தடாகம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 182 செங்கல் சூளைகளை மூடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை !!!
கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் 182 செங்கல் சூளைகளை மூடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தற்போது தெரிய வந்துள்ளது.
கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சின்னதடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 192 செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.செங்கல் சூளைகளுக்கான செம்மண் சுற்றுவட்டார கிராமங்களில் தோண்டியெடுத்து பயன்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் சின்னதடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி செம்மண் எடுக்கப்படுவதாகப் புகார் எழுந்தது.விளைநிலங்கள்,அரசு புறம்போக்கு நிலங்கள் மட்டுமின்றி, நீர் நிலைகளையும் விட்டுவைக்காமல் மண் வளம் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகிறது.

கனிமவள விதிகளின்படி அனுமதி பெற்ற அரசு நிலங்களாக இருந்தாலும்,தனியார் நிலங்களாக இருந்தாலும் மூன்று அடி ஆழத்துக்குள் மட்டுமே மண் எடுக்க வேண்டும், கனரக வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது,அருகே உள்ள நிலத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் போதிய இடைவெளியில் மண் எடுக்க வேண்டும், குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுமே மண் எடுக்க வேண்டும் உள்ளிட்ட சட்டங்களை மீறி செம்மண் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.நீர்வளம் மிகுந்த பகுதியில் 20 அடி முதல் 150 அடி வரை தோண்டி செம்மண் எடுக்கப்படுவதால் கிராமம் முழுவதும் பெரிய,பெரிய பள்ளங்களாக மாறி உள்ளது.
அண்மையில் செங்கல் சூளைகள் எதுவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவருவது அப்பகுதி மக்களுக்குத் தெரிய வந்தது.

இந்த நிலையில் தடாகம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்ட கேள்விகளுக்கு, தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் 182 செங்கல் சூளைகளை மூட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்திருப்பதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பதிலளித்துள்ளது.
இந்தாண்டு பிப்ரவரி 18ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை 182 செங்கல் சூளைகளுக்கு மூடுதல் உத்தரவு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக மொத்தமுள்ள 192 செங்கல் சூளைகளில் 182 செங்கல் சூளைகளை மூட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்திருந்தாலும், தொடர்ந்து பல்வேறு விதிமுறைகளை மீறி இயங்கி வரும் செங்கல் சூளைகள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என தொடர்ந்து அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.






