பங்காளி சண்டையால் பரிதவிக்கும் தம்பி… பகீர் புகாரால் வைகுண்டராஜனுக்கு கம்பி?

தாது மணல் கொள்ளையில் பல்லாயிரம் கோடி சம்பாதித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் மீது, சொத்துக்காக தனது தம்பியையே கொல்ல முயன்றதாக, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், அவருக்கு பெரும் ஏழரையாகி சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தாது மணல் என்றாலே உடனே நினைவுக்கு வருபவர் வைகுண்டராஜன் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. தாது மணல் தொழிலில் கொடிகட்டி பறந்து வந்த வைகுண்டராஜன், விவி மினரல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். தாது மணல் தொழிலில் பல்வேறு முறைகேடுகளை புரிந்து பல கோடிகளை ஈட்டியதாக, அவரை சுற்றிலும் எப்போதும் சர்ச்சைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதனால், வழக்குகள், வாய்தாகள், வருமான வரித்துறை சோதனை என்று வி.வி. மினரல்ஸ் நிறுவனம் பல நெருக்கடிகளை சந்தித்து வந்திருக்கிறது. தற்போது, அவரது தம்பி ஜெகதீசன் மூலம், புதிய தலைவலியும் ஆரம்பமாகி இருக்கிறது.

வைகுண்டராஜன் பிறந்தது, நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள கீரைக்காரன்தட்டு என்ற சிறிய கிராமம். சாதாரண குடும்பத்தில் பிறந்த வைகுண்டராஜன் சாமர்த்தியசாலி; சாதுர்யமாக காய்களை நகர்த்துவதில் வல்லவர். அவரது சகுனித்தனமான மூளை, குறுகிய காலத்தில் வி.வி.மினரல் என்று தாது மணல் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை தொடங்கும் அளவுக்கு உயர்த்தியது.

 

ராமனுக்கு எப்படி லட்சுமணனோ, அதுபோல் வைகுண்டராஜனின் அனைத்து வித தொழில் வளர்ச்சியிலும் அவருக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்தவர், அவரது உடன் பிறந்த தம்பி ஜெகதீசன். வி.வி. ரைஸ்மில், வி.வி. மரைன்ஸ், வி.வி. மரைன் கோல்டு ஸ்டார்ரேஜ், தூத்துக்குடி ஸ்டெர்லைட் அருகில் உள்ள டைட்டானியம் என்று கெமிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் கூட்டு தொழில் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வந்தன. அத்துடன், ஊடகத்துறையில் கால் பதித்தால், உதவும் என்று நினைத்து, தனது மகனை கொண்டு தமிழகத்தில் நியூஸ் 7 செய்தித் தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டது.

 

ஆனால், காலம் விசித்திரமானது. குபேரனாக இருந்தாலும், காலத்தின் கோலத்தில் சில சறுக்கல்களை சந்தித்தாக வேண்டும். அப்படித்தான் வைகுண்டராஜனுக்கும் ஜாகத கட்டங்கள், சாதகமில்லாமல் போனது. கணக்கில்லாமல் வருவாய் ஈட்டித்தந்த அமுதசுரபியான வி.வி.மினரல் தாது மணல் மற்றும் டைட்டானியம் கெமிக்கல்ஸ் ஆகியவற்றின் செயல்பாடுகள் அரசால் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

கோடிக்கணக்கான வருவாய் நின்று போனதால், வைகுண்டராஜன் திகைத்தார். வருமானத்திற்கு வழியின்றி தங்களது நிறுவனத்தின் ஊழியர்களுக்கே ஊதியம் கொடுக்க வழியில்லாத நிலை அவருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தாது மணல் தொழிலில் பணம் கொழித்து, உல்லாச வாழ்க்கை வாழ்ந்த வைகுண்ட ராஜனால், பண வரத்து குறைந்ததும் சும்மா இருக்க முடியவில்லை.

 

ஒரு கட்டத்தில் தனது சொந்த தம்பியிடமே மிரட்டி பணம் பறிக்கும் நிலைக்கு இறங்கி விட்டதாக, தகவல்கள் கசிந்தன. இதை உறுதி செய்வது போல், அவரது உடன்பிறந்த தம்பி ஜெகதீசனே, வைகுண்டராஜன் மீது புகார் கொடுத்திருக்கிறார். பிரித்து கொடுக்கபட்ட பங்குகளை கொண்டு தொழில் செய்து வரும் தமது தொழில் நிறுவனங்களை கைப்பற்ற, வைகுண்டராஜன் திட்டமிட்டுள்ளதாக, திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளரிடம் ஜெகதீசன் தரப்பில் எழுத்துப்பூர்வ புகார் மனு தரப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக ஜெகதீசன் அளித்துள்ள புகார் மனுவில் முதல் எதிரியாக அவரது சகோதரர் வைகுண்டராஜனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், கடந்த மே 19ம் தேதி, திசையன்விளையில் உள்ள வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்குள் நுழைந்த வைகுண்டராஜனின் ஆட்கள், அங்கிருந்த மேசை, நாற்காலிகளை எடுத்துச் சென்றதாகவும், மே 20ம் தேதி வி.வி.ரைஸ் மில்லில் இருந்த போது வைகுண்டராஜனின் ஆட்கள் 150 பேர் அத்துமீறி நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது சொத்துக்களுக்கான பாகப்பிரிவினை ஒப்பந்தத்தை போலியாக வைகுண்டராஜன் தரப்பில் தயாரித்து மோசடி முயற்சி நடப்பதாகவும், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் இடைக்கால தடை இருந்தும், வைகுண்டராஜன் தரப்பு செயல்பட்டு வருவதாகவும், அந்த புகார் மனுவில் ஜெகதீசன் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், தமக்கும் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வைகுண்ட ராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனுவில் ஜெகதீசன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 

தாது மணல் வைகுண்டராஜன் மீதான தம்பியின் புகாரால், அவர் தாதா வைகுண்டராஜனாகிவிட்டரோ என்ற சந்தேகம் எழுந்துள்ள சூழலில், தனக்குள்ள பணபலம், ஊடக பலம் ஆகியவற்றை கொண்டு, இந்த விஷயங்களை வெளிவரமால் அமுக்கிவிட்டதாக ஒரு தரப்பினர் குற்றாம்சாட்டுகின்றனர்.எனினும் தம்பியின் புகாரை விசாரித்து போலீசார் நடவடிக்கையை முடுக்கிவிட்டால், வைகுண்ட ராஜனுக்கு ஏழரை தான் என்று சொல்கிறார்கள்.

 

காவல்துறை விரைந்து செயல்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜனின் ராஜாங்கம் இனி எடுபடுவது சந்தேகம் தான் என்று பேசிக் கொள்கிறார்கள்.


Leave a Reply