சூப்பர் புயலாக இருந்த அம்பன் புயல் அதி தீவிர புயலாக வலுவிழந்து மேற்கு வங்கத்திலும், வங்கதேசத் துக்கும் இடையே கரையைக் கடந்தது. வங்கக்கடலில் தென்கிழக்கில் உருவாகி வடகிழக்கு திசையில் கரையைக் கடந்த அம்பன் புயல் பயணித்த பாதை என்ன ? வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த 13ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
மறுநாள் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. பின்னர் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது இந்த மண்டலம். இதன் பிறகு கடந்த 16ஆம் தேதி இரவு தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் ஆக வலுப்பெற்றது.
இந்த புயலுக்கு அம்பன் என பெயர் சூட்டப்பட்டது. அடுத்தடுத்து இதன் வேகம் உச்ச வரம்பை கடந்து வலுப்பெற்று சூப்பர் புயலாக உருவெடுத்தது. பின்னர் அதன் வேகம் நேற்று குறைந்ததால் வலுவிழந்து அதிதீவிர புயலாக மாறியது. வடக்கு மற்றும் வடகிழக்கு மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த அதிதீவிர புயல் மேற்கு வங்கம் வங்க தேசத்திற்கு இடையே கரையைக் கடந்தது.
அப்போது மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வரைகாற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் கூறப்பட்டுள்ளது.