அம்பன் புயல் வலுவிழந்து அதி தீவிர புயலாக மாறி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கொல்கத்தாவிற்கு சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இது கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தது. இது மேலும் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வலுவிழந்து நாளை வங்கதேசத்தில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக மேற்கு மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 150 கிலோமீட்டர் முதல் 160 கிலோ மீட்டர் வரை காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெற்கு வங்க கடல் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஒடிசா, மேற்கு வங்க எல்லையில் புயல் கரையை கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அது வங்கதேசத்தில் கரையை கடக்கும் என்று இப்போது கூறப்பட்டுள்ளது.