தாயம் விளையாடியவர்களுக்கு கொரொனாவை பரப்பியது யார்?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையில் அடுத்த பூவிருந்தவல்லியில் உடன் தாயம் விளையாடியவர்களுக்கு கொரொனா தொற்றைத்தந்த 39 வயது இளைஞருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற குழப்பம் இதுவரை தீர்ந்தபாடில்லை. திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சேர்ந்த 39 வயது இளைஞருக்கு இரு தினங்களுக்கு முன்னர் கொரொனா தொற்று ஏற்பட்டது.

 

அவர் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்தவர். அவருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையிலேயே உள்ளது. அவரது அலுவலகத்தில் பணியாற்றிய 26 பேரும் கண்காணிப்பு வளையத்தில் இருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

 

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பூவிருந்தவல்லி இளைஞர் மூலம் வேறு யாருக்கேனும் தொற்று பரவி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த ஆலையில் பதிவான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஆலை அமைந்துள்ள இருங்காட்டுக்கோட்டை தொழிற்பேட்டை பகுதி முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே அந்த ஆலயத்தில் கடந்த மார்ச் மாதம் சீனர்கள் சிலர் வந்து சென்றதாகவும், அவர்கள் ஆலையை சுற்றி பார்க்க உதவிய ஊழியருக்கு கொரொனா தொற்றிருப்பதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் குறித்து விசாரித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த தொடர் சோதனைகளின் விளைவாக பூவிருந்தவல்லியில் உள்ள இளைஞருடன் தாயம் விளையாடிய எதிர்வீட்டு நபருக்கும் கொரொனா தொற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

 

அவர்களோடு தொடர்பு கொண்ட ஏழு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் பணிபுரிந்த நகராட்சி சுகாதார ஊழியர்கள் 9 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வசித்த பகுதியை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீல் வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Leave a Reply