வெளவால்கள் மூலமாக பரவும் கொரோனா வைரஸ்.கலக்கத்தில் கிட்டாம்பாளையம் ஊராட்சி மக்கள் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா பற்றி நான்கு மாநிலங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநில வெளவால்களில் ஒருவகையான வைரஸ் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளதால் கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

 

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கிட்டாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் 2 ஆயிரம் வெளவால்கள் அங்குள்ள பல்வேறு அரச மரங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பமாக வாழ்ந்து இனப்பெருக்கம் செய்து வருகிறது.இவைகள் உணவு தேடி தினசரி, ஊட்டி, குன்னூர், சத்தியமங்கலம், தாளவாடி,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று இரவு நேரங்களில் உணவு தேடிச்சென்று பின்பு மீண்டும் கிட்டாம்பாளையம் பகுதியில் உள்ள மரங்களில் பகல் நேரங்களில் தங்கிவிடுகிறது. இந்த வெளவால்களை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் செல்ல பிள்ளைகள் போல பாதுகாத்து வருகின்றனர்.

 

இங்குள்ள மக்கள் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் முதல் வருடம் முழுவதும் பட்டாசு வெடிக்காமல் பல ஆண்டுகளாக இந்த பழம் தின்னி வெளவால்களை பாதுகாத்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் வெளவால்களின் தொண்டையில் கொரோனா வைரஸ் இருப்பதாக தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்ததால் கிட்டாம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இதனையடுத்து கிட்டாம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோரிடம் வெளவால்கள் குறித்தான நோய்த்தொற்றில் உரிய ஆராய்ச்சி செய்து, மனித இனத்திற்கு பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதனை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் வெளவால்களின் தொண்டையில் கொரோனா வைரஸ் இருப்பதாக தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ள நிலையில் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர்,ஆட்சியர் உள்ளிட்டோரிடம் தெரிவித்துள்ளதாகவும்,
உடனடியாக இதுகுறித்து கிட்டாம்பாளையம் பகுதியில் ஆய்வு செய்ய ஒரு மருத்துவ குழுவை அனுப்புவதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாகவும், கிட்டாம்பாளையத்தில் வாழ்ந்து வரும் வெளவால்கள் மூலம் வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என்றும்,வெளவால்களிடமிருந்து முழுமையாக மக்களை பாதுகாக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும், இதனால் மனிதர்களுக்கு எந்த தாக்கமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கு கோவை மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

 

அதன் அடிப்படையில் இன்று கிட்டாம்பாளையம் ஊராட்சி பகுதியில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வெளவால்களால் மக்களுக்கு தொந்தரவு ஏற்படாதவாறு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


Leave a Reply