“கொரோனாவுக்கு எதிரான போரில் வென்று வருகிறோம்!!” மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..! பிரதமர் மோடி அறிவிப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று வருகிறோம் என்றும், ஊரடங்கால் பெரும் சேதங்களை தவிர்த்துள்ளோம் என்றும் நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்திய போது குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஊரடங்கை வரும் மே 3-ந் தேதி வரை நீட்டிப்பதாகவும் அறிவித்துள்ளார். ஏப்ரல் 20-ந் தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது அதிகரித்துள்ளது.நாட்டில் கொரோனா வைரஸ் கடந்த மார்ச் முதல் வாரத்தில் பரவலாக ஆரம்பித்து மார்ச் 3-வது வாரத்தில் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளி ஒன்றே தீர்வு என்ற பிரதமர், அதற்கு பரீட்சார்த்த முயற்சியாக ஒரு நாள் முழுவதும் மக்களே முன் வந்து சுய ஊரடங்கை கடைப்பிடிக்க அழைப்பு விடுத்தார். இதனை் மார்ச் 22-ந் தேதி நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்து சுய ஊரடங்கை வெற்றிகரமாக்கினர்.

 

தொடர்ந்து மார்ச் 24-ந் தேதி உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் 3 வாரங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அவசியம் என்று கூறி அன்று இரவு முதலே அமலாவதாக அறிவித்தார். தொடர்ந்து ஏப்ரல் 3ந் தேதி 3-வது முறையாக உரையாற்றிய பிரதமர், கொரோனாவுக்கு எதிரான போரில் நமது ஒற்றுமையை உணர்த்த 5-ந் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகள் அனைத்தையும் அணைத்து விட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றுமாறு அழைப்பு விடுத்தார். இதனையும் நாட்டு மக்கள் கருமமே கண்ணாக ஒற்றுமையாக நிறைவேற்றினர்.

 

இந்நிலையில், 21 நாள் ஊரடங்கு உத்தரவு இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. தற்போதைய நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து இன்று 10 ஆயிரத்தை கடந்து உயிரிழப்பும் 358 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டித்துள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று காலை நாட்டு மக்களிடையே 4 வது முறையாக உரையாற்றினார். ஊரடங்கு தொடர்பாக பிரதமர் ஆற்ற உள்ள உரை தொடர்பாக ஒட்டுமொத்த இந்தியாவும் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், அவருடைய உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று வருகிறோம். பெரும் சேதங்களை தவிர்த்துள்ளோம். நாம் எடுத்த முன் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.ராணுவ வீரர்களை போல் நாட்டு மக்கள் கட்டுப்பாட்டுடன் ஊரடங்கை கடைபிடித்து வருகிறார்கள். மற்ற நாடுகளை விட கொரோனா தடுப்பில் இந்தியா நன்றாக செயல்படுகிறது.

 

தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விழாக்களை வீட்டிலேயே கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா வேகமாக பரவி வருகிறது. 21 நாட்கள் ஊரடங்கு காரணமாகவே கொரானோ பரவலை கட்டுப்படுத்த முடிந்தது. மக்களின் ஒத்துழைப்புடன் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்த்து வருகிறோம்.நாம் தேர்ந்தெடுத்த பாதை கடினமானது; சரியானது. மனித இடைவெளி, கொரோனா கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்ட மேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம். இந்த ஊரடங்கால் மக்கள் படும் சிரமம் புரிகிறது. உணவுக்காகவும், குடும்பத்தை விட்டு தொலைதூரங்களில் சிக்கித் தவிக்கும் பலரின் துயரங்களும் புரிகிறது.

 

கொரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்த மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கு அவசியமாகிறது. எனவே தற்போதுள்ள ஊரடங்கு வரும் மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தற்போதைய கட்டுப்பாடுகள் அனைத்தும் அப்படியே தொடரும்.கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை தீவிர கவனத்துடன் கையாள வேண்டும்.ஏப்ரல் 20-ந் தேதிக்குப் பிறகு நிபந்தனைகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

 

கொரானோவை கட்டுக்குள் கொண்டு வரும் பகுதிகளில் ஏப்ரல் 20-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் . ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறினால் தளர்வுகள் ரத்து செய்யப்படும்.ஊரடங்கு தொடர்பாக நாளை அரசு சார்பில் விரிவான வழிமுறைகள் கொடுக்கப்படும் என்பது போன்ற அம்சங்கள் பிரதமர் மோடியில் உரையில் முக்கியமாக இடம் பெற்றிருந்தன.


Leave a Reply