ஐரோப்பிய கண்டத்தை ஆட்டிப்படைக்கும் கொரொனா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உலகிலேயே கொரொனா தொற்று ஏற்பட்டவர்கள் அதிகம் வாழும் பகுதியாக ஐரோப்பிய கண்டம் மாறியுள்ளது. இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரொனா வைரஸ் உலக நாடுகளை திக்குமுக்காட செய்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய கண்டம் கொரொனா வைரஸின் மைமாகியுள்ளது.

 

கொரொனா வைரஸின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் ஐரோப்பிய நாடுகள் தவித்து வருகின்றன. உலக சுகாதார மையம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, ஐரோப்பிய நாடுகளில் கொரொனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்கி வருகிறது. ஸ்பெய்னில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 16 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஆனால் ஸ்பெயினில் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சூழல் ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறினார். எனினும் அவசரகால நிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு ஐரோப்பிய நாடான இத்தாலியில் தான் அதிக உயிரிழப்பு நடந்துள்ளது.

 

இங்கு 18 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரொனாவுக்கு பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இங்கு ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. ஜெர்மனியும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு ஊரடங்கு தளர்வு என அரசு ஆலோசித்து வருகிறது.

 

பிரான்சில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும் தகவலாக அமைந்துள்ளது. பிரான்ஸின் மிக கடுமையான முறையில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனை பொறுத்தவரை பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

 

இன்னும் மருத்துவமனையில் தான் இருக்கிறார். ஈஸ்டர் பண்டிகையையொட்டி மக்கள் வெளியே வரக்கூடாது என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


Leave a Reply