இலங்கையில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து முகநூல் காதலனை தேடி சென்னைக்கு பறந்து வந்த காதல் பறவை ரிஸ்வி பாத்திமா இவர். பாத்திமாவின் தந்தை ஜெயினுலாபுதீன் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில் தாயின் பராமரிப்பில் இருந்த பாத்திமா முகநூலில் மூழ்கியதால் நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்துள்ளார்.
அப்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஆண்டிகுப்பத்தை சேர்ந்த முகமது முபாரக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த முகமது முபாரக்கின் மயங்கும் வார்த்தை ஜாலத்தில் இதயத்தைப் பறி கொடுத்த பாத்திமா அவரை காதலிக்க தொடங்கினார். அடுத்த சில நாட்களிலேயே செல்போன் நம்பர்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு மணிக்கணக்கில் பேசத் தொடங்கியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலனை சந்திக்கும் ஆவலில் பாத்திமா சென்னைக்கு விமானம் ஏறி வந்ததாக கூறப்படுகிறது. காதலன் முகமது முபாரக்கை சந்தித்த பின் அவரது திட்டப்படி இருவரும் சென்னையிலிருந்து காதலனின் சொந்த ஊரான கிராமத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. தனது மகளின் கடல்கடந்த காதல் விவகாரம் தெரிந்து அதிர்ந்து போன பாத்திமாவின் தந்தை ஜெயினுலாபுதீன் துபாயில் இருந்து சென்னை வந்தார்.
பண்ருட்டி தமுமுக நகர செயலாளர் அலாவுதீன் மூலம் தனது மகள் காதலனுடன் சொந்த ஊரில் இருப்பதை அறிந்த அவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உதவி கோரியுள்ளார். கடந்த 26ஆம் தேதி சுற்றுலா விசாவில் வந்த தனது மகளை காதல் ஆசை காட்டி முகமது முபாரக் வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக புகார் அளித்தார்.
காவல்துறையினர் விசாரித்து சென்றபோது காதல்ஜோடி அங்கிருந்து தலைமறைவானது. இதனையடுத்து முகமது முபாரக்கின் செல்போன் நம்பரை வைத்து சென்னையில் தனியாக வீடு எடுத்து காதலியுடன் தங்கியிருந்த பாத்திமாவை காவல் துறையினர் மீட்டு அழைத்து சென்றனர்.
சம்பந்தப்பட்ட பெண் மேஜராக இருந்தாலும் அவர் சுற்றுலா விசாவில் வந்திருப்பதால் குறைந்தபட்சம் 15 நாளில் இருந்து அதிகபட்சமாக மூன்று மாதங்கள் மட்டுமே இங்கு தங்க முடியும் என்ற விதி இருப்பதால் தந்தையுடன் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதா அல்லது காதலனுடன் இங்கேயே தங்குவதற்கு அனுமதி அளிப்பதா என்பது தெரியாமல் காவல்துறையினர் குழம்பியுள்ளனர்.
ஆனால் தனது மகளை இலங்கைக்கு அழைத்து சென்று விட வேண்டும் என்பதில் பெற்ற கடனுக்காக தந்தை உறுதியாக உள்ளார். வழக்கமாக முகநூல் காதல், காதலர்களில் ஒருவர் தான் உச்சத்தில் நிறுத்தும் ஆனால் பாத்திமா விவகாரத்தில் காதலியின் தந்தையை தவிக்க விட்டுள்ளது.