எஸ்.எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொன்றது யார்?

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்எஸ்ஐ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் நபர்களுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியாக பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 

களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்றுவிட்டு 2 பேர் தப்பி சென்றுவிட்டனர். கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. அவர்கள் கன்னியாகுமரியை சேர்ந்த தவ்ஃபீக் மற்றும் அப்துல் சமீம் என்று கூறப்பட்டுள்ளது.

 

இதில் அப்துல் சமீமின் புகைப்படம் 2014 ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் மூவரில் ஒருவர் படத்துடன் ஒத்துப்போகிறது. அவரது பெயரும் அப்துல் சமீம் என்பதால் இரு கொலைகளிலும் ஈடுபட்டது ஒரே நபராக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 

ஆனால் அப்துல் சமீம் உட்பட 3 பேரும் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் களியக்காவிளையில் வில்சனை கொலை செய்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் வில்சன் கொலையில் தேடப்படுபவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த மூவர் தான் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடையவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல உதவியதாக சொல்லப்படுகிறது. எனவே சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடையவர்கள் உண்மையிலேயே வெளிநாடு தப்பி சென்றார்களா? அப்படி என்றால் அவர்களில் ஒருவர் களியக்காவிளை வந்தது ஏன்? வில்சன் எதற்காக கொல்லப்பட்டார்? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை தேடுகிறது காவல்துறை.


Leave a Reply