‘ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு?’ – மனம் திறந்த பிரித்விராஜ்
தமிழில் மொழி, பாரிஜாதம், அபியும் நானும், சத்தம் போடாதே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டவர் மலையாள நடிகர் பிரித்திவிராஜ். தமிழில் இந்த பெயரில் நடிகராக அறிமுகமான இவர் மலையாளத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் என்ற பெயரில் இயக்குனராக அறிமுகமானார்.
இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் திரைப்படம் மலையாள திரையுலகில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. ஒரு பக்கம் பிரித்திவிராஜ் ரசிகர்கள் மற்றொரு பக்கம் மோகன்லால் ரசிகர்கள் என படத்தை தூக்கி நிறுத்தினர்.
ஆகவே படம் நினைத்ததை விட பெரும் வெற்றியை ஈட்டியது. இந்த நிலையில் நடிகர் பிரித்திவிராஜ் தனது ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர் ரஜினிகாந்த் குறித்து பேசிய பேச்சு வைரலாக மாறியிருக்கிறது. முதலில் மிக சாதாரணமாக பேச தொடங்கிய பிரித்திவிராஜ், இறுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசும்போது தான் லூசிபர் படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது தனக்கு ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்தது என்றும், ஆனால் அந்த படத்தை முடித்த பின் ஆறு ஜீவிதம் படத்தில் ஒப்பந்தமாகி இருந்ததால் துரதிர்ஷ்டவசமாக ரஜினி படத்தை நழுவ விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி தன்னால் படத்தை இயக்க முடியாததற்கு காரணம் சொல்லி ஒரு நீண்ட கடிதத்தை ரஜினிகாந்திற்கு எழுதியதாகவும், தன் வாழ்க்கையில் யாருக்கும் இப்படி ஒரு நீண்ட மன்னிப்பு கடிதத்தை எழுதுவேன் என்று நினைக்கவே இல்லை என்றும் கூறியுள்ளார். இவர் குறிப்பிட்ட தகவல் மூலம் ரஜினி தனது படத்தை இயக்க வேண்டி நடிகர் பிருத்திவிராஜை அழைத்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
அப்படி என்றால் ரஜினிக்கு நடிகர் பிரித்விராஜ் ஒரு கதை கூறியிருக்க வேண்டும். அந்த கதை என்ன ஆனது. அதில் ஒருவேளை மீண்டும் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




