நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்ஷய் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
அதில் படுகாயமடைந்த நிர்பயா 13 நாட்கள் போராட்டத்துக்குப் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய்குமார் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. அக்ஷய்குமார் தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.