தலைமறைவான நித்யானந்தா ஈகுவடார் அருகே உள்ள தீவில் இருப்பதாகவும், இல்லை இல்லை அவர் கரீபியன் தீவில் இருக்கிறார் எனவும் மாறிமாறி தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
நித்தியானந்தாவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் நிலையில், அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குஜராத்தில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த தனது மகள்கள் லோகமித்ரா, நித்திய நந்திதா ஆகியோர் கடத்தப்பட்டதாக ஜனார்த்தனா ஷர்மா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவரையும் மீட்டு ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டனர். இந்நிலையில் ஜனார்த்தனா ஷர்மாவின் மகள்கள் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தாங்கள் அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் தங்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தாங்கள் தந்தையுடன் செல்ல விரும்பவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தந்தை சர்மாவால் இருவருக்கும் ஆபத்து இருப்பதாக மித்ரா, நித்திய நந்திதா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும் நீதிமன்றம் விரும்பினால் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராவதற்கு தயாராக இருப்பதாகவும் ஜனார்தன ஷர்மாவின் மகள்கள் லோக மித்ராவும், நித்திய நந்திதாவும் தெரிவித்துள்ளனர் .
இந்த நிலையில் நித்தியானந்தா தன்னை விட அறிவாளி எனவும் அவரிடம் மிகப்பெரிய சக்திகள் இருப்பதாக நம்புவதாகவும் நடிகர் எஸ்வி சேகர் கூறியுள்ளார். சுவாமி நித்யானந்தா கைலாஷ் என்கிற இந்து நாட்டை உருவாக்கினால்அங்கு சென்று வருவேன் என்று நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தாவை வைத்து இந்து மதத்தை கேவலப்படுத்த கூடிய முயற்சி நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தலைமறைவாக உள்ள நித்யானந்தாவை தேடி காவல்துறை களமிறங்கியுள்ள நிலையில் அவர் எங்கே பதுங்கி உள்ளார் என்ற மர்மம் நீடித்து கொண்டே இருக்கிறது. குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் நித்தியானந்தாவிற்கு சிலர் ஆதரவு தெரிவிப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.