இரண்டு பெண்களை காதலித்துள்ளார் இந்த இளைஞர். ஆனால் யாரை திருமணம் செய்து கொள்வது என்ற குழப்பத்தின் உச்சகட்டமாக தற்கொலை செய்துகொண்டு பரிதாபமாக உயிரிழக்க ஒட்டுமொத்த உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். 23 வயதே நிரம்பிய இந்த இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணை மணிகண்டன் காதலித்து வந்துள்ளார். இரு வீட்டாரும் பேசி திருமணத்திற்கு சம்மதித்துள்ளனர். கெட்டிமேளம் கொட்ட நாளும் குறிக்கப்பட்ட நிலையில் தான் அந்த அதிர்ச்சி திருப்பம் அரங்கேறியது. மணிகண்டன் முதன்முதலில் காதலித்து பிரிந்த இளம்பெண் மீண்டும் மணிகண்டனிடம் வந்து கதறி அழுதுள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மன்றாடுகிறார். இதனால் மனம் மாறிய மணிகண்டன் தன் முன்னாள் காதலியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனை அறிந்து இரண்டாவது காதலியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
மணிகண்டன் இடமும் அவரது பெற்றோரிடமும் தகராறு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த மணிகண்டன் அந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இரண்டு காதலிகளில் யாரை திருமணம் செய்து கொள்வது என்ற குழப்பத்தில் இருந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டனின் பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.