இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ இடையேயான விவகாரத்தை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் தான் பல ஆண்டுகளாக இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இந்தநிலையில் தங்களிடத்தில் இருந்து வெளியேறும்படி பிரசாத் ஸ்டூடியோ இளையராஜாவிடம் தெரிவித்தது. இதுதொடர்பாக கடந்த 28ம் தேதி திரையுலகினர் பிரசாத் ஸ்டூடியோ அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் இட உரிமை தொடர்பாக இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோ இடையேயான வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
அதில் தன்னுடைய இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்களை தாக்கல் செய்தும் உரிமையியல் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை என கூறியிருக்கிறார். பிரசாத் ஸ்டுடியோவில் 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்களுக்கு இசையமைத்து பதிவு செய்துள்ளதாக இளையராஜா தனது வழக்கில் தெரிவித்துள்ளார்.
வாதங்களை கேட்ட உயர்நீதிமன்ற இவ்விவகாரத்தில் இளையராஜா, பிரசாத் ஸ்டுடியோ என இரு தரப்பும் பேசித் தீர்வு காண அறிவுறுத்தி சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.