மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : உத்தவ் தாக்கரேவுக்கு “நோ பிராப்ளம்”!!
மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவில், புதிய ஆட்சி அமைப்பதில் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த குழப்பம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.சிவசேனா, என்.சி.பி., காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணி அமைத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன் தினம் பதவியேற்றார். அவருடன் மூன்று கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் வீதம் 6 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியேற்றவுடன், டிசம்பர் 3-ந்தேதிக்குள், சட்டப்பேரவையில் தமது பெரும்பான்மை நீரூபிக்க வேண்டும் என ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கெடு விதித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே கொண்டு வருவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
288உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில், பெரும்பான்மைக்கு 145 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சிவசேனா கூட்டணிக்கு 166 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில், உத்தவ் தாக்கரே, எளிதில் வெற்றி பெறுவது என்பது உறுதி என்றே தெரிகிறது.
,





