தமிழகம் முழுவதும் இடைவிடாது பெய்யும் கனமழை: பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!
தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருவதால் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் முழுவதும் கன மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும், கடலோர மாவட்டங்களிலும் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது பரவலாக மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காரைக்கால் ,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக, நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை முழுக் கொள்ள வை (143 அடி) எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் அணையிலிருந்து 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




