மகாராஷ்டிராவில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரையை ஏற்று, குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், மகாராஷ்டிராவில், அரசியல் குழப்பம் நீடிக்கிறது. புதிய அரசு அமைக்க வரும்படி பாஜகவுக்கு ஆளுநர் பகத் சிங் கோசியாரி முதலில் அழைப்பு விடுத்தார்.
ஆனால் போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் ஆட்சியமைக்க விரும்பவில்லை என்று, பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையேற்ற சிவசேனா, 3 நாள் அவகாசம் கோரியது.
ஆனால் ஆளுநர் அவகாசம் அளிக்க மறுத்து விட்டார். பின்னர் தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அக்கட்சி இன்று இரவு 7.30க்குள் தனது முடிவை தெரிவிப்பதாக கூறியிருந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு ஆளுநர் பரிந்துரை செய்திருப்பதாகவும், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்ப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.