ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கொள்ளை முயற்சி : வாடிக்கையாளரே கருவியை அப்புறப்படுத்திவிட்டு காவல்நிலையத்தில் புகார்

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை சூலூர் காவல் எல்லைக்குட்பட்ட பாப்பம்பட்டி பிரிவில் இருக்கும் கனரா வங்கி ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களின் செயலை வாடிக்கையாளர் ஒருவரே முறியடித்த சம்பவம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

 

தமிழகத்தில் ஏ.டி.எம். இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியை வைத்து,ஏ.டி.எம். அட்டையின் தகவல்களைத் திருடும் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில்,கோவை மாவட்டத்தில் இதுபோன்று ஸ்கிம்மர் கருவிகளை வைத்து வாடிக்கையாளர்களின் தகவல்களை சேமித்து கொள்ளையடித்த கும்பல்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஸ்கிம்மர் கருவிகள் பொருத்தி கொள்ளையடிக்கும் முயற்சிகள் தலை தூக்கியுள்ளது.

இந்த நிலையில், இன்று கோவை சூலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் பாப்பம்பட்டிபிரிவு அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் கனரா வங்கி ஏ.டி.எம். உள்ளது. அங்கு மின்சார ஒப்பந்த வேலை செய்யும் சிங்காநல்லூரை சேர்ந்த நந்தகுமார் (38) என்பவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ 10,000 எடுக்க ஏ.டி.எம். சென்றுள்ளார்.

 

அப்போது,அவர் தனது ஏ.டி.எம். கார்டை இயந்திரத்தில் சொருகியபோது அது சிக்கிக் கொண்டதையடுத்து, கார்டை இழுக்க முற்பட்டார். ஆனால்,கார்டுடன் சேர்ந்து இயந்திரத்தில் இருந்து கருவியும் வந்துள்ளது. அதில், சந்தேகமடைந்த நந்தகுமார் ஏ.டி.எம் இயந்திரத்தில் சோதனை செய்த போது,கேமராவுடன் கூடிய ஒரு கருவி இருப்பது தெரியவந்தது.

அதை பிடுங்கிய நந்தகுமார் வங்கி மேலாளருக்கும் சூலூர் காவல் துறைக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து, தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்கிம்மர் கருவி குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சூலூர் அருகே வாடிக்கையாளர் ஒருவர் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற போது, ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு இருப்பதைக் கண்டு, அதனை அப்புறப்படுத்தி விட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply