தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, இப்போதே அதிரடி வியூகங்களை அதிமுக வகுத்து வருகிறது. இதற்காக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு , சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது நடந்த18 சட்டசபை தொகுதி தேர்தல் மற்றும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில், அதிமுக அதிக வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லாவிட்டால் ஆட்சி கவிழும் ஆபத்து இருக்கிறது.
ஒருவேளை தேர்தல் முடிவுகள் வெளிவந்து, 10க்கும் மேற்பட்ட சட்டசபை இடங்களில் அதிமுக வெற்றி பெற்றாலும் கூட, ஆட்சி தொடர்வதற்கு, மேற்கண்ட 4 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்காது என்பதால், தலைக்கு மேல் கத்தியாக சிக்கல் தொடர வாய்ப்பு உள்ளது.
இதை தவிர்க்க வியூகம் வகுத்து வரும் அதிமுக, சட்டசபை உறுப்பினர் கருணாஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருதாச்சலம் கலைச்செல்வன் உள்ளிட்டோருக்கு, சபாநாயகர் அனுப்பி நடவடிக்கை எடுக்க உள்ளதாக, சட்டசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், கருணாஸ் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் நோட்டீஸ் அனுப்புவார் என்று தெரிகிறது.