அன்பழகன், மு.க. ஸ்டாலின், கனிமொழி வாக்களிப்பு! மணக்கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதி

திமுக மூத்த தலைவர் அன்பழகன், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் தத்தமது வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். ஜம்மு காஷ்மீரில், திருமண கோலத்தில் தம்பதியர் ஜனநாயக கடமையை செய்தனர்.

 

மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலில் இன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகள், 19 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.

 

வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்து ஆர்வமுடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் ஜனநாயக கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.

 

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தனது வாக்கினை பதிவு செய்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தற்போதைய தேர்தல் முக்கியமான தேர்தலாக அமைய போகிறது என்று அவர் கருத்து தெரிவித்தார். இதேபோல் கனிமொழியும் வாக்குப்பதிவு செய்தார்.

விழுப்புரம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்தார் அன்புமணி ராமதாஸ். கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்களித்தார். சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வாக்களித்தார்.

 

கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். சென்னை நெற்குன்றம் வாக்குச்சாவடியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வாக்களித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த கையோடு, புதுமண தம்பதியர் மணக்கோலத்தில் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை முடித்தனர்.


Leave a Reply