பல இடங்களில் பொறுமையை சோதித்த ஈ.வி.எம்.! மக்கர் செய்த மிஷின்களால் வாக்காளர்கள் அவதி

Publish by: --- Photo :


தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், பல இடங்களில் ஈ.வி.எம். எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு, வாக்காளர்களின் பொறுமையை சோதித்தன.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 217ல் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானால் பொதுமக்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள அண்ணாவரம் கிராமத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. புழல் பப்ளிராஜா பள்ளியில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு காரணமாக 7.45 மணிக்கு தான் வாக்குபதிவு தொடங்கியது

 

உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி ஆர்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 56ல் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டு, வாக்குப்பதிவு தாமதமானது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் நகராட்சிப் பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக 1 மணி நேரமாக வாக்காளர்கள் காத்திருக்க நேரிட்டது. பணகுடியில் 31வது வாக்குசாவடியில் 31 வாக்குகள் பதிவான நிலையில் இயந்திரம் கோளாறு ஏற்பட்டது.

 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வாக்களித்த தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை வாக்குச்சாவடியில் மின்வெட்டால் வாக்குப்பதிவு தாமதமானது. கோவை ஸ்ரீவில்லிப்புத்தூர், அம்பாசமுத்திரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு, பின்னர் சரி செய்து வாக்குப்பதிவு நடைபெற்றது.


Leave a Reply