திமுகவில் இருந்து முல்லை வேந்தன் திடீர் நீக்கம்! ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்திய சந்திப்பு

திமுகவில் இருந்து முல்லைவேந்தன் தற்காலிகமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

 

தருமபுரியை சேர்ந்த திமுக மூத்த நிர்வாகியான முல்லைவேந்தன், திமுக சார்பில் 1989, 1996 மற்றும் 2016ஆம் ஆண்டு மொரப்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அமைச்சராகவும் வலம் வந்தார்.

 

எனினும், அதன் பின் தேமுதிகவுக்கு தாவினார். சிறிது காலத்தில் அங்கு ஏற்பட்ட அதிருப்தியில் ஒதுங்கி இருந்தவரை, திமுக தலைமையே அழைத்து கட்சியில் சேர்த்துக் கொண்டது. எனினும், கட்சியில் உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்று கூறி, அமைதியாகவே இருந்து வந்தார். மக்களவை தேர்தல் பணிகளில் கூட நாட்டம் காட்டவில்லை.

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் அன்புமணி ராமதாஸை முல்லை வேந்தன் சந்தித்ததாகவும், விரைவில் திமுகவில் இருந்து விலகவுள்ளதாகவும், திமுக தலைமைக்கு தகவல் எட்டியது. இதை தொடர்ந்து, அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி, திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை, திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இன்று வெளியிட்டுள்ளார்.

 

வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், முல்லைவேந்தன் மீதான நடவடிக்கை, தருமபுரி மாவட்டத்தில் திமுகவிற்கு சற்று பின்னடைவை தரும் என்று, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Leave a Reply