வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தா? தேர்தல் ஆணையத்தின் பதில் இதுதான்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் தந்துள்ளது.

 

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில், அதன் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுகின்றனர். இதற்கிடையே, மார்ச் 30 ஆம்தேதி, துரை முருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, ரூ. 10.5 லட்சம் பணத்தை கைப்பற்றினர்.

 

சில தினங்களில், துரைமுருகனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் திமுக பிரமுகர் வீட்டில் இருந்து ரூ. 11.53 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், கதிர் ஆனந்த் மற்றும் இரண்டு திமுக பிரமுகர்கள் மீது காவல்துறிய வழக்குப்பதிவு செய்தது.

 

அதிகளவில் பணம் கைப்பற்றப்பட்டதால், வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக, நேற்று தகவல் பரவியது.

 

ஆனால், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை எந்த உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஷெய்பாலி சரண் டெல்லியில் தெரிவித்துள்ளார்.

 

எனினும் தேர்தல் ரத்து செய்யப்படாது என்றோ அல்லது ரத்தாகும் என்றோ தேர்தல் ஆணையம் குறிப்பிடவில்லை. வாக்குப்பதிவுக்கு ஒருநாளே இருப்பதால், அதற்குள் தேர்தல் ஆணையம் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்க வாய்ப்புள்ளதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.


Leave a Reply