பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து, அவற்றில் செயற்கைக்கோள்களை பொருத்தி விண்வெளிக்கு வெற்றிகரமாக ஏவி வருகிறது. அந்தவகையில் தற்போது இஸ்ரோ தயாரித்துள்ள பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் வருகிற 1-ந்தேதி காலை 9.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதுவும் இந்த ராக்கெட் முதன் முறையாக வெவ்வேறு புவிவட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ராக்கெட்டில் மின்னணு நுண்ணறிவு செயற்கைக்கோளான ‘எமிசாட்’ உடன் 28 வணிக ரீதியிலான செயற்கைக்கோள்களும் ஏவப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீ‌‌ஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வருகிற 1-ந்தேதி ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 47-வது திட்டமாகும்.

இந்த ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 71-வது ராக்கெட், இந்த ஆண்டு ஏவப்படும் 2-வது ராக்கெட் மற்றும் பி.எஸ்.எல்.வி.- க்யூஎல் ரகத்தில் முதல் ராக்கெட் என்ற பெருமைகளை இந்த ராக்கெட் பெறுகிறது.

பொதுவாக ஒரே ஒரு புவிவட்டப்பாதையில் தான் செயற்கைக்கோள்களை ராக்கெட்டுகள் நிலை நிறுத்துவது வழக்கம். ஆனால் இந்த ராக்கெட்டில் வெவ்வேறு வகையான 3 புவிவட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்த இருக்கிறது.

இந்திய ரேடார் நெட்வொர்க்கை கண்காணிப்பதற்காக 436 கிலோ எடை கொண்ட ‘எமிசாட்’ செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது. மின்காந்த நிறமாலை அளவீடு செய்வதற்காக பயன்படுகிறது. இந்த செயற்கைக்கோள் தரைமட்டத்தில் இருந்து சுமார் 753 கி.மீ உயரத்தில் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

இதுதவிர லித்துவேனியா நாட்டுக்கு சொந்தமான 2 செயற்கைக்கோள்கள், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு சொந்தமான தலா 1 செயற்கைக்கோள்கள் மற்றும் அமெரிக்கா நாட்டை சேர்ந்த 24 செயற்கைக்கோள்கள் உட்பட 28 செயற்கைக்கோள்களும் சுமார் 505 கி.மீ உயரத்தில் விண்வெளியில் நிலை நிறுத்தப்படுகிறது. 29 செயற்கைக்கோள்களும் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த உடன், ராக்கெட்டின் 4-வது நிலை வேறுபட்ட உயரத்திற்கு இயக்கப்படுகிறது.

இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சிக்கும் இவை பயன்படுத்தப்படும். இஸ்ரோ உள்ளிட்ட இந்திய நிறுவனங்களால் பல்வேறு சோதனைகள் நடத்த ஒரு தளமாக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும்.

பொதுவாக செயற்கைக்கோள்களை புவிவட்ட பாதையில் கொண்டு சேர்த்த பின்னர், ராக்கெட்டுகளின் எந்திரம் விண்வெளி குப்பையாக மாறி அங்கேயே சுழன்று கொண்டு இருக்கும். ஆனால் கடந்து 2 முறையாக இஸ்ரோவின் மேம்படுத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் விண்வெளி குப்பை சேருவது தடுக்கப்பட்டு வருகிறது. விண்ணில் ராக்கெட்டின் 4-வது நிலையில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் 4 முறை நிறுத்தி சோதனை செய்யப்படுகிறது. இறுதிகட்ட பணியான கவுண்ட்டவுன் வரும் 30-ந்தேதி(நாளை மறுநாள்) தொடங்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.


Leave a Reply