அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியா பாடுபட்டது என்று கூறப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்காவின் உளவுத்துறையான மத்திய புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) இயக்குனர் ஜேம்ஸ் கோமி விசாரணை நடத்தி வந்தார். பின்னர் அவர் இருந்து நீக்கப்பட்டு, சிறப்பு விசாரணை அதிகாரியாக எப்.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லரிடம் வழங்கப்பட்டது.
ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழு கடந்த 22 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது. இப்போது விசாரணை முடிந்து, அதன் அறிக்கை, அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷியா எந்த வகையிலும் உதவவில்லை என்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை தொகுத்து அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், பாராளுமன்றத்தில் பகிரக்கூடிய அம்சங்களை முடிவு செய்வார். வார இறுதியில் இந்த அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளை தெரிவிக்க இருப்பதாக பாராளுமன்ற தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வில்லியம் பார் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகே அறிக்கையின் முழு விவரம் தெரியவரும்.
அதிபர் டிரம்பின் முன்னாள் கூட்டாளிகள் ஆறு பேர் மீதும், பல ரஷியர்கள் மீதும் இந்த சிறப்பு விசாரணை ஆணையம் ஏற்கெனவே குற்றம் சுமத்தியுள்ளது. டிரம்பின் பிரசாரத்திற்கு உதவ ரஷியர்கள் பலர் முன்வந்தபோதும் சதி நடந்திருப்பதற்கான ஆதாரத்தை முல்லர் கண்டறியவில்லை என அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.