தோனியை வம்புக்கு இழுக்கும் கவுதம் கம்பீர் இந்த முறை விராட் கோலி பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் தோனி தன்மீதான விமர்சனத்திற்கு எப்போது தனது செயல்பாடுகள் மூலமே பதிலளிப்பார். தேவையில்லாத கமென்டுகளை காதில் ஏற்றிக்கொள்ள மாட்டார். களத்தில் என்றாலும் சரி களத்திற்கு வெளியே என்றாலும் சரி தன் மீது எழும் விமர்சனங்களுக்கு அதிரடியான பாணியில் பதிலடி கொடுப்பது கோலியின் ஸ்டைல்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. ஐபிஎல் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த கம்பீர், ஐபிஎல் தொடர்களில் மூன்று முறை கோப்பைகளை வென்ற ரோஹித் ஷர்மா, தோனியுடன் விராட் கோலியை ஒப்பிடுவது தவறு. அவர் ஆர்.சி.பியில் கடந்த 8 வருடங்களாக கேப்டனாக உள்ளார். அவர் பெங்களூரு அணியின் கேப்டனாக இருப்பது அவரது அதிர்ஷ்டம். ஏனென்றால் நிறைய கேப்டன்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. கோப்பையை வென்று தரவில்லை என்றால் அவர்கள் உடனடியாக மாற்றப்பட்டனர் எனப் பேசியிருந்தார்
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கோலி, “ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும் அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்பதை வைத்து என்னை எடைபோட்டால் அதைப்பற்றி எல்லாம் எனக்குக் கவலையில்லை. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாகச் செயல்படுகிறேன். எல்லாக் கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என முயற்சி செய்கிறேன். சில சமயங்களில் அது கைகூடாமல் போகிறது.
நாங்கள் ஏன் கோப்பைகளை வெல்லவில்லை என்பதை ஆராய வேண்டும். கடினமான சூழ்நிலைகளில் எடுத்த சில தவறான முடிவுகளே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. வெளியிலிருந்து பார்ப்பவர்கள் போல் நான் செயல்பட்டால் என்னால் 5 போட்டிகளில் கூட நான் தாக்குப்பிடிக்க மாட்டேன். நான் வீட்டில்தான் இருக்க வேண்டும்.ஐபிஎல் போட்டிகளில் கோப்பைகளை வெல்லாதது குறித்து சிலர் பேசுவது எனக்குத் தெரிகிறது. அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது அதைக் கெட்டியாக பற்றிக்கொண்டு பேசுகிறார்கள். ஆனால், கேப்டன் என்ற முறையில் எனக்குச் சில பொறுப்புகள் இருக்கிறது. ஐபிஎல் கோப்பையை வெல்ல நான் மிகவும் விரும்புகிறேன். நான் அதைச் செய்ய நீங்கள் என்னை ஊக்குவிக்க வேண்டும். கோப்பை வெல்லவில்லை என்பதுதான் எதார்த்தம். இதற்காக எந்தச் சாக்குப்போக்கும் நான் கூற விரும்பவில்லை. கடந்த காலங்களில் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
ஆனால், இதில் எதார்த்தமான உண்மை என்னவென்றால் நாங்கள் 6 அரையிறுதிப்போட்டிகளில் விளையாடி உள்ளோம். வெற்றிக்கு மிக அருகில்தான் இருந்துள்ளோம். இனி வரும் காலங்களில் நாங்கள் சிறப்பான முடிவுகள் எடுத்தால் இந்த நிலையைத் தாண்டி செல்ல முடியும்” என்றார்.