--- --:--:-- --

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் 20% முன்னுரிமை..!

5

மிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணி நியமனங்களில் நேரடி நியமனத்துக்கான காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் பணியிடங்களை தமிழ் வழிக் கல்வி படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை எண்.82, பத்தி 4-ல் குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பதிலாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் மாற்றி அமைத்து அரசு ஆணையிட்டு உள்ளது.

 

இதுகுறித்து அரசு தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது; 1 ஆம் வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி வரை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 2010-ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அந்த சட்டத்துக்கான 2020-ம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட தகுதி உடையவர்கள் ஆவர்.

 

இதர மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டு படித்து தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இந்த முன்னுரிமை ஒதுக்கீட்டுக்கு தகுதியுடையவர்கள் அல்லர். ஒன்றாம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து தமிழ் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்து தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமி்ழ் மொழியைப் பயிற்று மொழியாக் கொண்டு படித்து, பின்னர் தமிழ்நாட்டில் தங்கள் கல்வியை, சேரும் வகுப்பில் இருந்து தொடர்ந்து தமிழ் வழியில் படித்தவர்களும் முன்னுரிமை பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

 

நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் படித்த, சம்பந்தப்பட்ட அனைத்துக் கல்வி நிலையங்களில் இருந்தும் தமிழ் வழியில் கல்வி படித்ததற்கான சான்றிதழ் பெற வேண்டும். பள்ளிக் கல்வியாக இருந்தால் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வழங்கும் சான்றிதழ் அடிப்படையிலும், உயர்கல்வியாக இருந்தால் தொழிற்பயிற்சி நிலையம், கல்லூரி, பல்கலைக்கழக முதல்வர், பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.

 

இந்த சான்றிதழ் பணியில் உள்ள அதிகாரிகளால் மட்டும் அளிக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற அலுவலர்களால் அளிக்கப்படக்கூடாது. பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக தனித் தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் முன்னுரிமை வழங்கத் தகுதியுடையவர்களாக ஆகமாட்டார்கள். தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி, கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.

 

இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ள 20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடானது நேரடி பணி நியமனத்திற்கான ஒவ்வொரு தேர்வு நிலையிலும் (முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் இதரநிலைகள்) பதவி வாரியாகப் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon