மேட்டூர் அணையில் இருந்து 12,000 கனஅடி நீர் திறப்பு..!
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 1.66 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு 1.23 லட்சம் கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று நண்பகல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.47 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 109.2 அடியாக உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 99.11 அடியாக இருந்தது.
இதன்படி ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு 77.2 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 120 அடி கொண்ட மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி வருவதால், விரைவில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.58 லட்சம் கன அடியாக உள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்தருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 13-வது நாளாக நீடிக்கிறது. இதேபோல் இரவு நேரங்களில் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார். நீர் திறக்கும்போதும், அதற்கு முன்பாகவும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





