11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை..!
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக இரண்டு அணிகளாக இருந்தபோது 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ பன்னீர்செல்வம், பாண்டியராஜன் உள்ளிட்ட 11 பேர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்த நிலையில் இவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்காத நிலையில் உச்ச நீதிமன்றமே நேரடியாக 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. முன்னதாக இந்த வழக்கில் சபாநாயகர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய திமுக எம்எல்ஏக்களிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் பதில் அளித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.







