புதிதாக 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்..!
திருவள்ளூர் மாவட்டத்தில் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ரயில் மற்றும் சாலை இணைப்புகளுடன் சரக்கு பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா, குளிர்பதன சேமிப்புக் கிடங்கு இயந்திரங்கள் மூலம் சரக்குகளை கையாளுதல் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் அரசு அனுமதி பெறுதல் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த வசதிகள் அனைத்தும் இந்த பூங்காவில் அமைக்கப்பட இருப்பதாகவும் இதன் மூலம் சரக்கு போக்குவரத்து கணிசமான அளவில் குறையும் எனவும் எடுத்துக்கூறினார்.
சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இணைந்து செயல்படும் இந்த சேவை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் அமைக்கப்பட்டு வரும் பெங்களூரு சென்னை விரைவு சாலை திருப்பெரும்புதூர் அருகே முடிவடையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர் விரைவு சாலை சென்னை வானூர்தி நிலையம் வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.
கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் இதுபோன்று பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட வேண்டும் எனவும் இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு தரும் எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.







