வருமானத்தை மறைத்ததாக முதல்வர் விஜய் மீதான வழக்கு..!
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக முதல்வர் விஜய் மீது தொடரப்பட்ட வருமான வரி விவகாரம் தொடர்பான மனு ஒன்று, மனுதாரர் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2015-ஆம் ஆண்டில் நடிகர் விஜய் (தற்போதைய முதல்வர்) இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ‘புலி’ திரைப்படத்திற்காக அவர் பெற்ற 15 கோடி ரூபாய் வருவாயை முறையாகக் கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராத உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கை கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.இந்தச் சூழலில், கொடுங்கையூரைச் சேர்ந்த எம்.ராஜ்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் புதிய பொதுநல மனு ஒன்றைத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், வருமான வரிச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விதிக்கப்பட்ட அபராதம் ஆகியவற்றின் அடிப்படையில், வருமானத்தை மறைத்ததற்காகவும், மோசடி மற்றும் குற்றச்சதியில் ஈடுபட்டதற்காகவும் முதல்வர் விஜய்க்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பதை ஆராய, சம்பந்தப்பட்ட கோப்புகளை அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவானது தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கைத் தொடர விரும்பாமல் திரும்பப் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரரின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.





