இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு?
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சனிக்கிழமையன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது வட மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், தென் கிழக்கு வங்கடக் கடலில் வரும் 22 ஆம் தேதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்பட்சத்தில், அது மேற்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் இன்று மிதமான மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்தவகையில் கனமழை பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுப்பார்கள்.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று(18/11/25) செவ்வாய்க்கிழமை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
அதேநேரம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார். அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று (18.11.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
மழை காரணமாக நாகை மாவட்டத்திற்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அந்த மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.





