விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் – முதலமைச்சர்
கரூரில் தவெக தலைவர் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
கரூரில் நிகழ்ந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியதாக கூறினார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் அன்றைய தினம், வெளிமாவட்டங்களையும் சேர்த்து 601 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்நிலையில், தவெக தலைவர் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே, கூட்ட நெரிசலுக்கு பிரதான காரணம் என்று முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், காவல்துறையின் அறிவுரைகளை மீறி அக்ஷயா மருத்துவமனையில் இருந்து தவெகவின் வாகனம் 30 முதல் 35 மீட்டர் சென்ற போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது, அவர்களை காப்பாற்றத் தான் ஆம்புலன்ஸ் வந்ததாகவும், ஆம்புலன்ஸ் வந்ததால் நெரிசல் ஏற்படவில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். அதே இடத்தில் நடைபெற்ற அதிமுக பரப்புரைக் கூட்டம், கட்டுப்பாடுடன் நடந்ததாக கூறிய முதலமைச்சர், கட்டுப்பாடுகளை மீறும் போது பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனி, இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அனைத்து அரசியல் இயக்கங்களும் உறுதி எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். கரூரில் உடற்கூராய்வு தொடங்கி, முடிவடைந்த நேரம், மருத்துவ சிகிச்சை பெற்றோரின் விவரம், மருத்துவர்கள் எத்தனை பேர் இருந்தனர் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.






