திமுக அரசின் சாதனைகளை பக்தியின் பேரில் பகல் வேஷம் போடுபவர்களால் தாங்க முடியவில்லை!
பக்தியின் பெயரில் பகல் வேஷம் போடுபவர்களால் திமுக அரசின் சாதனைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 32 இணைகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 கிராம் தங்கத் தாலி உட்பட 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீர் வரிசைகளை கொடுத்து திருமணம் நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை மகத்தான வளர்ச்சியை பெற்றுள்ளது. பக்தர்கள் போற்றக்கூடிய அரசாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவு 3,177 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். 997 திருக்கோவில்களுக்கு சொந்தமான 7,650 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
6 ஆயிரம் கோடி மதிப்பில் 26 ஆயிரம் கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களை தொன்மை மாறாமல் புனரமைக்க ரூ.425 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அடியார்க்கு அடியார்போல் அமைச்சர் சேகர்பாபு உழைத்து வருகிறார். அமைச்சர் சேகர்பாபு செயல்பாபு மட்டுமின்றி புயல் பாபுவாகவும் மாறியுள்ளார்.






