--- --:--:-- --

திமுகவை அழித்துவிடலாம் என சிலர் காணும் கனவு பலிக்காது – முதலமைச்சர் ஸ்டாலின்

2

திமுகவை அழித்துவிடலாம் என யார் யாரோ புறப்பட்டு இருப்பதாகக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக நிர்வாகி பாபு இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிசா சட்டத்தில் திமுகவினர் கைது செய்யப்பட்டதை நினைவுகூர்ந்தார்.

 

அத்தகைய நெருக்கடிகளை சந்தித்த திமுகவை யாராலும் அழித்துவிட முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தத்தை சட்டரீதியாகவும், போராட்டம் வாயிலாகவும் திமுக தொடர்ந்து எதிர்க்கும் என்று கூறினார். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை திமுக வாக்குச்சாவடி முகவர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

 

மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வரும் நவம்பர் 11 ஆம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்று நம்முடைய உணர்வை வெளிப்படுத்த இருக்கிறோம்.

 

ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலின் அடிப்படையில், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து படிவங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படிவங்களை டிசம்பர் மாதம் 4 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து, மீண்டும் சமர்ப்பித்தாக வேண்டும். இந்தப் படிவங்களைச் சமர்ப்பிக்கும் பெயர்கள் மட்டுமே புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்ற நெருக்கடி உள்ளது.

 

தேர்தல் ஆணைய அதிகாரிகள் டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் மூன்று முறை வீடுகளுக்கு வர இருக்கிறார்கள். நாம் வேலைக்குச் சென்றிருந்தாலோ அல்லது வீட்டில் இல்லாவிட்டாலோ, நம்முடைய வாக்குரிமையை இழக்கும் சூழ்நிலை ஏற்படலாம். பிறகு, ஆன்லைனில் பெயரைச் சேர்க்க முயற்சிக்கும்போது, தேர்தல் நேரத்தில் பல சிக்கல்கள் ஏற்படும். இதனால், ஏழை, எளியவர்கள், உழைப்பாளர்கள் மற்றும் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

ராகுல் காந்தி வாக்காளர் மோசடிக்கு எதிராகப் போராடி வருகிறார். குறிப்பாக, கர்நாடகா, ஹரியானா போன்ற பகுதிகளில் நடந்த வாக்குத் திருட்டுகளை ஆதாரத்துடன் அவர் வெளியிட்டுள்ளார். அப்படிப்பட்ட நிலை தமிழ்நாட்டில் நடக்கக் கூடாது. வருமுன் காப்பது நம்முடைய முக்கிய கடமை.

 

திமுக-வின் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பெரிய பொறுப்பைச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் காவலர்களாக திமுக பூத் ஏஜெண்டுகள் செயல்பட வேண்டும்.” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Right Menu Icon