இன்று முக்கிய மசோதாவை தாக்கல் செய்கிறார் முதல்வர்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதா ஒன்றை இன்று தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை நேற்று (அக்.14) தொடங்கியது. பேரவை கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள், மறைந்த முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் சிபு சோரன், மறைந்த கேரளாக முதல்வர் அச்சுதானந்தன், மறைந்த சிபிஐ மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், மறைந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பீலா வெங்கடேசன், மறைந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இன்று நடைபெறவுள்ள இரண்டாவது நாள் கூட்டத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, முக்கிய பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பளங்கள் வழங்குவது தொடர்பான சட்டத்திருத்த மசோதா மற்றும் தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளன. இந்நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதா ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மசோதா குறித்து விவாதிக்கும் வகையில் முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று அவசர ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.






