நிற்காமல் சென்ற பேருந்து..கேள்வி கேட்ட பத்திரிகையாளரை டிரைவர் வீடியோ எடுத்ததால் பரபரப்பு..!
திருவாடானை பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பயணிகள் கடும் அவதி. கேள்வி கேட்ட பத்திரிகையாளரை டிரைவர் வீடியோ எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு தொண்டி செல்வதற்காக அரசுப் பேருந்து ஒன்று நான்கு ரோடு சந்திப்பு சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் கடும் சிரமப்பட்டுள்ளனர்.
அப்போது அந்த அரசுப் பேருந்தை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் கையசைத்து காண்பித்தும் அவர்களை அலட்சியப்படுத்தி விட்டு பேருந்தை நிறுத்தாமல் சென்று விட்டார். அந்த சமயத்தில் அவ்வழியாக பைக்கில் வந்த நமது செய்தியாளர் ஆனந்தகுமார் தகவலை அறிந்தவுடன் அந்த பேருந்தை பின்தொடர்ந்து பைக்கில் சென்றுள்ளார்.

அந்த அரசுப்பேருந்து அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது பின் தொடர்ந்து வந்த செய்தியாளர் அந்த அரசுப் பேருந்து டிரைவரிடம் ஏன் முந்தைய பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் கையசைத்து காண்பித்தும் பேருந்தை நிறுத்தாமல் அலட்சியமாக வந்தீர்கள் என்று கேட்டதற்கு, அந்த பேருந்து டிரைவர் எவ்வித பதிலும் கூறாமல், அதற்கு பதிலாக கேள்வி கேட்ட செய்தியாளரை ஆணவத்துடன் மிரட்டும் தொணியில் படம் பிடித்து விட்டு பேருந்தை இயக்கிச் சென்றுள்ளார்.
ஆகையால் கடமையைச் செய்ய தவறியதோடு கேள்வி எழுப்பிய செய்தியாளரை மிரட்டும் தொணியில் வீடியோ படம் பிடித்து அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட அரசுப் பேருந்து டிரைவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






