11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு, எங்கு தவறு நேர்ந்தாலும் “குற்றம் குற்றமே” என்று சமரசமின்றி, நடுநிலையோடு செல்லும் எங்களின் பயணும் உங்கள் ஆதரவோடு என்றும் தொடரும்.

 

‘குற்றம் குற்றமே’ என்ற அரசியல் மற்றும் புலனாய்வு வார இதழ், தனது 10-வது ஆண்டை நிறைவு செய்து, இன்று 11ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மக்கள் நலன் மட்டுமே பிரதானம் எனும் பயணத்தை குற்றம் குற்றமே தொடர்கிறது. வெறும் செய்திகளை மட்டும் அளிப்பதோடு நின்றுவிடாமல், சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் துணிச்சலுடன் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பணியை குற்றம் குற்றமே செய்து வருகிறது.

சமூகம் மற்றும் அரசியல் குறித்த ஆழமான பார்வைகளை, எளிய நடையில் வழங்குவதன் மூலம், ஒவ்வொரு வாசகரையும் சிந்திக்கத் தூண்டுகிறது. “குற்றம் குற்றமே” எனத் துணிச்சலாக வெளிப்படுத்தும் அதன் ஒவ்வொரு சொல்லும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிக்கைத்துறைக்கு உள்ள பொறுப்பை உணர்த்துகிறது.

 

குற்றம் குற்றமே 11ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதன் ஆசிரியர் ஷஷ்டி கண்ணதாசன் கூறியதாவது: திருப்பூர் மக்களின் குரலாக ஒலித்துவரும் குற்றம் குற்றமே இதழ், எந்த ஒரு சார்புமின்றி, நேர்மையுடன் தொடர்ந்து செயல்படும். தவறு புரியும் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் என யாராக இருந்தாலும், தயக்கமின்றி விமர்சனம் செய்து, அதன் மூலம் மக்களுக்கான நீதியை நிலைநாட்ட முயற்சிப்போம் என்று உறுதி அளிக்கிறோம்.

இந்த இதழ், வரும் காலங்களிலும் இதே துணிச்சலுடனும் நேர்மையுடனும் செயல்பட்டு, சமூக மாற்றத்திற்கான பயணத்தில் தொடர்ந்து ஒளிரும். நாங்கள் செய்திகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்படுகிறோம்.

 

மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள் போன்றவற்றை நடத்தி, சமூகசேவைக்கு பங்களிப்பு செய்கிறோம். இந்த சேவைகள், இந்த இதழ் ஒரு பத்திரிகையாக மட்டும் இல்லாமல், சமூக நலனில் அக்கறை கொண்ட ஒரு அமைப்பாகவும் திகழ்கிறது என்பதை நிரூபிக்கின்றன. செய்திகளைச் சேகரிப்பதில் காட்டும் அதே துணிச்சலையும் நேர்மையையும், மக்கள் நலத் திட்டங்களிலும் செய்கிறோம்.

 

குற்றம் குற்றமே இதழின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் வாசகர்கள், விளம்பரதாரர்கள், ஏஜெண்டுகள் மற்றும் பக்க துணையாக இருக்கும் தொழில் அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், பின்னலாடை தொழில் துறையினர், அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, குற்றம் குற்றமே நிறுவன ஆசிரியர் சஷ்டி கண்ணதாசன் தெரிவித்தார்.


ஜார்கண்ட் மாநில புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு  குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழ் வாழ்த்து

இந்திய  ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியா முழுவதும் உள்ள  13 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை  நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இதில் ஜார்கண்ட் மாநில கவர்னராக இருந்த  ரமேஷ் பையஸ் மகாராஷ்டிரா மாநில கவர்னராக மாற்றப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த 61 வயதான முன்னாள் மாநில பா.ஜ.க தலைவர்  சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்கண்ட் மாநில 10-வது கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மாநிலத்தில்தான் தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு 2015 ஆண்டு முதல் 6 ஆண்டுகள் 2 மாதம் ஜார்கண்ட் மாநில கவர்னராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

 

அதேபோல் மணிப்பூர் மாநில கவர்னராக இருந்த தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் நாகலாந்து கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். இத்துடன் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை செளந்திரராஜன் பாண்டிச்சேரி கவர்னராக இருப்பதன் மூலம் இந்தியாவில் 3 கவர்னர்கள்  பணியாற்றி வருவது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

1957 ஆம் ஆண்டு மே மாதம் 4 ந் தேதி பிறந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 14 வயதில்  பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.  2 தடவை கோவை மற்றும் திருப்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மாநில பாஜக தலைவராகவும், 2021 ஆம் ஆண்டு கேரளா சட்டசபை தேர்தலின் போது மாநில பொறுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.  இந்திய அரசின் கயிறு வாரிய தலைவராகவும் இருந்துள்ளார்.

 

இதனையடுத்து திருப்பூரில் ஷெரிப் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள், பாஜக பிரமுகர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் நேரில் சந்தித்து சலவை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக கவர்னராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்  ஜார்கண்ட் மாநில புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனை குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழ் ஆசிரியர் எம்.கண்ணதாசன் மற்றும் நிருபர் சஃபியுல்லா ஆகியோர் மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


‘குற்றம் குற்றமே’போஸ்டர்கள் கிழிப்பு: திருப்பூரில் பரபரப்பு!‘அன்பகம் திருப்பதி’ தரப்புக்கு தோல்வி பீதியா?.. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவது நீதியா?

திருப்பூரில், தேர்தல் கள நிலவரத்தை வெளியிட்ட ‘குற்றம் குற்றமே’ வார இதழ் போஸ்டர்களை, அதிமுகவின் ஒரு தரப்பினர் கிழித்தெறிந்தது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தோல்வி பயத்தில், பத்திரிகை சுதந்திரத்தில் குறுக்கிடுவதை ஏற்க முடியாது என்று , சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் பிப். 17ம் தேதி இன்று மாலையுடன் நிறைவடைவதால், இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதனிடையே, திருப்பூரில் உள்ள தேர்தல் நிலவரம், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்த கள நிலவரத்தை அலசி, ஆராய்ந்து “குற்றம் குற்றமே” வார இதழில், சிறப்புக் கட்டுரைகள் வெளியாகி, வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

 

அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி, 42வது வார்டு நிலவரம் குறித்து, “குற்றம் குற்றமே” வார இதழில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. “வெங்கடாசலத்துக்கு ஜெயம்! அவப்பெயரால் திருப்பதிக்கு பயம் !! என்ற தலைப்பில், விரிவால அலசல் வெளியாகி இருந்தது.

 

போஸ்டர்கள் கிழிப்பு

 

அதில், மக்களுடன் மக்களாக பழகும், திமுக வேட்பாளர் தம்பி வெங்கடாசலத்தில் கையே, வார்டில் ஓங்கி இருப்பதாகவும், வார்டு முழுக்க நல்ல பேரு.. வெற்றி வாய்ப்பு நூற்றுக்கு நூறு” என்றும்
வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டாலும், அமைச்சருக்கு உரிய பந்தாவுடன் அதிமுகவை சேர்ந்த அன்பகம் திருப்பதிக்கான வெற்றி வாய்ப்பு குறைவு என்றும் “குற்றம் குற்றமே” இதழ், மக்களின் உண்மையான மன நிலையை சுட்டிக் காட்டியிருந்தது. மேலும், இந்த செய்தி தொடர்பான போஸ்டர்கள், திருப்பூர் நகரில், அனுமதி பெற்ற இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தன.

 

இந்த நிலையில், 42வது வார்டில், அன்பகம் திருப்பதியின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்ட சிலர், இந்த செய்தியை படித்த பின்னர் ஆவேசமடைந்தனர். “குற்றம் குற்றமே” வார இதழ் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை கிழித்தெறிந்து, தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்.

 

தோல்வி பீதியா?

 

ஜனநாயகத்தின் 4வது தூணாக பத்திரிகைகள் விளங்குகின்றன. அத்தகைய பத்திரிகைகள், தேர்தலின் போது களநிலவரத்தை ஆராய்ந்து கட்டுரையை வெளியிட, சட்டத்தின்படி அனைத்து சுதந்திரமும் உள்ளது. அப்படியிருக்க, அன்பகம் திருப்பதியின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டு சில குண்டர்கள், பத்திரிகை போஸ்டர்களை கிழித்து, தங்களது எதிர்ப்பை காட்டியிருப்பது, சமூக ஆர்வலர்களையும், பத்திரிகையாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வெற்றியோ தோல்வியோ அதை நெஞ்சுரத்துடன் ஏற்பதே, ஒரு அரசியல்வாதிக்கு அழகு. அதுபோல், பத்திரிகை செய்திகளை பார்த்து பதற்றமடைவதும், தோல்வி பயத்தால் பத்திரிகைகளின் குரல்வளையை நெறிக்க முற்படுவதும் கோழைத்தனம்.

 

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, அன்பகம் திருப்பதியின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், இத்தகைய வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டால், ஒருவேளை வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வார்களோ? என்று வாக்காளர்கள் நினைக்க மாட்டார்களா? கள நிலவரத்தை நேரில் ஆராய்ந்து உண்மையை பத்திரிகைகள் உரக்கச் சொல்லும்போது, அது தங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால், பத்திரிக்கையை மிரட்டும் போக்கை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும்” என்றனர்.

தோலுரித்து காட்டும்..

 

சமுதாயத்தில் நிலவும் அவலங்களை, ஊழல், முறைகேடுகளை தோலுரித்து காட்டுவதே “குற்றம் குற்றம்” இதழின் தலையாய பணி. இதில் எப்போதுமே சமரசம் செய்து கொண்டதில்லை. நேர்மையும், துணிவுமே எங்களின் ஆயுதம். வாசகர்களே எங்களின் கவசம். எனவே, குற்றம் எங்கும் நிகழ்ந்தாலும் “குற்றம் குற்றமே” வார இதழ் தொடர்ந்து தட்டிக் கேட்கும்!