திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி ஊரானது கற்களில் சாமி சிலைகள் செய்வதில் உலக புகழ் பெற்றது. இங்கு 150 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. இதன்முலம் தினமும் சாமி சிலைகள், அரசியல் தலைவர்கள், தூண்கள், பல்வேறு விலங்குகள் உள்பட வகை, வகையான சிலைகள் செய்யப்படுகிறது.
சாமி சிலைகள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இலங்கை, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சிற்பங்கள் செய்வதற்கான கற்கள் திருப்பூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊத்துக்குளியில் உள்ள கல் குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு பின்னர் திருமுருகன்பூண்டி க்கு கொண்டு வரப்பட்டு பின்னர் சாமி சிலைகள் பிரத்யேகமாக செய்யப்பட்டு வருகிறது. ஊத்துக்குளியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள் மட்டுமே சாமி சிலைகள் செய்வதற்கு ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர், திருமுருகன்பூண்டி – பூலுவப்பட்டி ரிங் ரோட்டில் மாதேஸ்வரன் கோவில் பின்புறம் ஸ்ரீ திருமகள் சிற்பக் கலைக் கூடத்தை நிறுவி நடத்தி வருபவர் வீரபத்திரன் மகன் சிவகுமார் (வயது 44). சிலைகள் செய்வதில் புகழ் பெற்ற சிற்பியான இவர் 4 வது தலைமுறையாக கற்களில் சிற்பங்களை செதுக்கி வருகிறார். இவரது மனைவி பத்மபிரியா. மகள் இந்துமதி கல்லூரி மாணவி, மகன் ஸ்ரீ சபரிநாதன் + 2 பள்ளி மாணவர். இவரது சிற்பக் கூடத்தில் இருந்து 10 கைகளுடன் கொல்கத்தா காளி சிலை, பஞ்சவேத பிள்ளையார் சிலை, ஸ்ரீ வனபத்ர காளியம்மன் சிலை உள்பட பல்வேறு பெரிய சிலைகள் செதுக்கி இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக சைன பெருமாள் ரங்கநாதர் என்னும் பள்ளி கொண்ட பெருமாள் சிலையும், ஸ்ரீ அஷ்டோத்தரசத லிங்கம் என்னும் 108 சிவலிங்கம் சிலையும் செய்துள்ளார். இதுகுறித்து சிற்பி சிவகுமார் கூறியதாவது: நாங்கள் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஈஸ்வரன் கல்குவாரியில் 8 டன் எடை கொண்ட கல்லை தேர்வு செய்து லாரி மூலம் பூண்டி கொண்டு வந்தோம். இந்த வேலையை (சிவகுமார்) எனது தலைமையில், சிற்ப தொழிலாளர்கள் பாண்டி, கருப்பன், ராதாகிருஷ்ணன், அம்புராஜ், சந்தோஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் காலை, மாலை என நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேலை செய்து 45 மாதங்களில் முடித்துள்ளோம்.
பள்ளி கொண்ட பெருமாள் சிலையானது பீடத்துடன் ஐந்தேகால் அடி உயரம், ஆறே கால் அடி நீளத்துடன் ஐந்து தலை நாக பாம்பு படம் எடுத்து தன்னுடைய 16 அடி நீள உடலை சுற்றியபடி ஸ்ரீ தேவி, பூ தேவி இருவரும் பின்னால் நிற்க, நாக உடலுக்கு கீழே அனுமன் மற்றும் கருடன் பாதுகாப்புக்கு நின்ற நிலையில், பெருமாள் கால் தாமரையின் மீது வைத்திருப்பது போலவும், அவரது தலை தலைகாணியில் சாய்ந்து உள்ளது போலவும், தலையில் கிரீடம், கழுத்தில் நெக்லஸ், இடுப்பில் வஸ்தகம் கட்டிய நிலையிலும், அதேபோல் கையில் சங்கு சக்கரமும் உள்ளது போல் செதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அஷ்டோத்திர சத லிங்கம் என்னும் 108 சரசலிங்க சிலையானது ஏழரை அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஒரு சிவன் சிலையிலேயே 107 சிவன் சிலைகள் சிறிய அளவில் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் ஐந்து தலை நாக பாம்பின் கீழே ஏழு கன்னிமார்கள் சிலை நான்கே கால் அடி அகலத்திலும், சிவன் வாகனமான நந்தி சிலையானது நான்கே கால் அடி நீளத்திலும், அதே போல் லட்சுமி கணபதி சிலையானது மூன்றேகால் அடியில் லட்சுமியை இடது தொடையில் அமர்த்தியவாறு எலி வாகனத்தின் மீது உட்கார்ந்திருப்பது போல் செதுக்கப்பட்டுள்ளது.
இத்துடன் சிலைகள் செதுக்கும் போது சாஸ்திர, ஐதீகப்படி சிலைகளில் சூரியன் எனப்படும் வலது கண்ணை தங்க ஊசி மூலமும், சந்திரன் எனப்படும் இடது கண்ணை வெள்ளி ஊசி மூலமும் கீறி கண்கள் செதுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 7 லட்சமாகும். இந்த சிலையானது கோவில் நிர்வாகிகள் ஆலய நிர்வாகிகள் கதிர் ராஜன், சந்திரமோகன், குமார், விஜய் முருகன், காளியப்பன், சீனி ஆகியோர் முன்னிலையில் நேற்று முறையாக பூஜைகள் செய்யப்பட்டு, பாதுகாப்பாக லாரியில் ஏற்றப்பட்டு சேலம் மாவட்டம், மேட்டூர் அணை, தொழிலாளர் இல்ல பகுதியான ஸ்ரீ பெரிய பத்ரகாளியம்மன், ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் அருகில் ஓம் அம்மையப்பர் திருக்குடிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இவ்வாறு சிற்பி சிவகுமார் கூறினார்.