‘குற்றம் குற்றமே’போஸ்டர்கள் கிழிப்பு: திருப்பூரில் பரபரப்பு!‘அன்பகம் திருப்பதி’ தரப்புக்கு தோல்வி பீதியா?.. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவது நீதியா?

திருப்பூரில், தேர்தல் கள நிலவரத்தை வெளியிட்ட ‘குற்றம் குற்றமே’ வார இதழ் போஸ்டர்களை, அதிமுகவின் ஒரு தரப்பினர் கிழித்தெறிந்தது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தோல்வி பயத்தில், பத்திரிகை சுதந்திரத்தில் குறுக்கிடுவதை ஏற்க முடியாது என்று , சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் பிப். 17ம் தேதி இன்று மாலையுடன் நிறைவடைவதால், இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதனிடையே, திருப்பூரில் உள்ள தேர்தல் நிலவரம், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்த கள நிலவரத்தை அலசி, ஆராய்ந்து “குற்றம் குற்றமே” வார இதழில், சிறப்புக் கட்டுரைகள் வெளியாகி, வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

 

அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி, 42வது வார்டு நிலவரம் குறித்து, “குற்றம் குற்றமே” வார இதழில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. “வெங்கடாசலத்துக்கு ஜெயம்! அவப்பெயரால் திருப்பதிக்கு பயம் !! என்ற தலைப்பில், விரிவால அலசல் வெளியாகி இருந்தது.

 

போஸ்டர்கள் கிழிப்பு

 

அதில், மக்களுடன் மக்களாக பழகும், திமுக வேட்பாளர் தம்பி வெங்கடாசலத்தில் கையே, வார்டில் ஓங்கி இருப்பதாகவும், வார்டு முழுக்க நல்ல பேரு.. வெற்றி வாய்ப்பு நூற்றுக்கு நூறு” என்றும்
வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டாலும், அமைச்சருக்கு உரிய பந்தாவுடன் அதிமுகவை சேர்ந்த அன்பகம் திருப்பதிக்கான வெற்றி வாய்ப்பு குறைவு என்றும் “குற்றம் குற்றமே” இதழ், மக்களின் உண்மையான மன நிலையை சுட்டிக் காட்டியிருந்தது. மேலும், இந்த செய்தி தொடர்பான போஸ்டர்கள், திருப்பூர் நகரில், அனுமதி பெற்ற இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தன.

 

இந்த நிலையில், 42வது வார்டில், அன்பகம் திருப்பதியின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்ட சிலர், இந்த செய்தியை படித்த பின்னர் ஆவேசமடைந்தனர். “குற்றம் குற்றமே” வார இதழ் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை கிழித்தெறிந்து, தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்.

 

தோல்வி பீதியா?

 

ஜனநாயகத்தின் 4வது தூணாக பத்திரிகைகள் விளங்குகின்றன. அத்தகைய பத்திரிகைகள், தேர்தலின் போது களநிலவரத்தை ஆராய்ந்து கட்டுரையை வெளியிட, சட்டத்தின்படி அனைத்து சுதந்திரமும் உள்ளது. அப்படியிருக்க, அன்பகம் திருப்பதியின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டு சில குண்டர்கள், பத்திரிகை போஸ்டர்களை கிழித்து, தங்களது எதிர்ப்பை காட்டியிருப்பது, சமூக ஆர்வலர்களையும், பத்திரிகையாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வெற்றியோ தோல்வியோ அதை நெஞ்சுரத்துடன் ஏற்பதே, ஒரு அரசியல்வாதிக்கு அழகு. அதுபோல், பத்திரிகை செய்திகளை பார்த்து பதற்றமடைவதும், தோல்வி பயத்தால் பத்திரிகைகளின் குரல்வளையை நெறிக்க முற்படுவதும் கோழைத்தனம்.

 

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, அன்பகம் திருப்பதியின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், இத்தகைய வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டால், ஒருவேளை வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வார்களோ? என்று வாக்காளர்கள் நினைக்க மாட்டார்களா? கள நிலவரத்தை நேரில் ஆராய்ந்து உண்மையை பத்திரிகைகள் உரக்கச் சொல்லும்போது, அது தங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால், பத்திரிக்கையை மிரட்டும் போக்கை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும்” என்றனர்.

தோலுரித்து காட்டும்..

 

சமுதாயத்தில் நிலவும் அவலங்களை, ஊழல், முறைகேடுகளை தோலுரித்து காட்டுவதே “குற்றம் குற்றம்” இதழின் தலையாய பணி. இதில் எப்போதுமே சமரசம் செய்து கொண்டதில்லை. நேர்மையும், துணிவுமே எங்களின் ஆயுதம். வாசகர்களே எங்களின் கவசம். எனவே, குற்றம் எங்கும் நிகழ்ந்தாலும் “குற்றம் குற்றமே” வார இதழ் தொடர்ந்து தட்டிக் கேட்கும்!