“வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு இன்று 381 வயது..!” ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., வாழ்த்து!!

சென்னப்பட்டினம், மதராச பட்டணம், மதராஸ், மெட்ராஸ் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு இன்று சென்னை என உலகம் முழுக்க அறியப்படும் சென்னை உருவாகி இன்றோடு 381 ஆண்டுகள் ஆகிறது.

 

இதனை சென்னை தினம் என ஆண்டுதோறும் இந்த நாளில் கொண்டாடி தீர்க்கின்றனர் சென்னை வாசிகள் . ஏனெனில் சென்னைக்கு பல பெருமைகள் இருந்தாலும்,வந்தாரை.

 

வாழ வைக்கும் சென்னையில் வசிக்கும் முக்காலே அரைக்கால் வீசம் பேர் புலம் பெயர்ந்தவர்கள் தான் என்றால் மிகையாகாது.

1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி சென்னை உருவானதாக ஆவணங்கள் கூறுகின்றன. சின்னஞ் சிறு கிராமம் போல் இருந்த ஒரு பகுதியை சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து வெள்ளைக்கார துரை ஒருவர் விலைக்கு வாங்கியதாகவும், அந்த இடத்துக்கு சென்னப்ப நாயக்கர் பெயரிலேயே சென்னப்பட்டினம் என பெயர் சூட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. சிறு கிராமமாக இருந்த சென்னப்பட்டினம், பின்னர் மதராசபட்டணம், அப்புறம் மெட்ராஸ் என அழைக்கப்பட்டு 1996-ல் சென்னை என்ற தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது.

 

சென்னையின் அடையாளங்களான பல நூறு ஆண்டுகளைக் கடந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை , ரிப்பன் மாளிகை, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், ராயபுரம், எக்மோர் ரயில் நிலையங்கள் போன்றவை இன்றும் பொழிவு மாறாமல் பழமையை பறை சாற்றுகின்றன.

 

இது போன்று எண்ணற்ற கட்டடங்கள் இன்னும் சென்னைக்கு அடையாளமாக திகழ்கின்றன. இன்று பெரும் மாநகராக உருமாறியுள்ள சென்னை உலகம் அறிந்த நகரமாக திகழும் நிலையில், வந்தாரை வாழ வைத்து, தங்களுக்கு முகவரி கொடுத்த சென்னையை இந்த தினத்தில் ஒவ்வொருவரும் உற்சாகமாக நினைவு கூறி கொண்டாடுகின்றனர்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., வாழ்த்து

இன்று சென்னை தினத்தையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் டுவிட்டரில் சென்னையின் புகழை பறைசாற்றியுள்ளார். அதில், வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381.பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை! என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில், ஆசியாவின் டெட்ராய்ட், மருத்துவ தலைநகர், தொன்மையான மாநகராட்சி என பற்பல பாரம்பரிய பெருமைகள் கொண்ட சென்னையின் 381வது பிறந்த தினம் இன்று!

 

வந்தாரை வாழவைக்கும் நகரமும் பலதரப்பட்ட மக்களின் மானுட சமுத்திரமுமான சென்னை எத்தனை எத்தனை இடர்வரினும் மீண்டு எழும்! மறுமலர்ச்சி பெறும்.. என பதிவிட்டுள்ளார். இதே போன்று சென்னையின் நினைவுகளை பிரபலங்கள் பலரும் உற்காகமாக பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

&