திருப்பூரில் எஸ்ஐஆர் பணிகளில் நீடிக்கும் குளறுபடி – கால அவகாசம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர் நிறைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் அவசரக் கோலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுகின்றன. இப்பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்.
மேலும் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசு நிர்வாகத்தின் வழக்கமான அன்றாட மக்கள் பணிகள் முடங்கி பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே தேர்தல் ஆணையம் கூடுதல் கால அவகாசம் வழங்கி, குளறுபடியின்றி எஸ்.ஐ.ஆர். பணியை நடத்திடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் வியாழனன்று எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வுப் (எஸ்.ஐ.ஆர்) பணிகளை தேர்தல் ஆணையம், போர்க் கால வேகத்தில் நடத்தி வருவதாக பத்திரிக்கைச் செய்திகள், ஆட்சியர் அலுவலக கூட்டங்கள் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால், வாக்காளர் படிவங்கள் எழுதுவதில் உள்ள தெளிவற்ற நிலை, 2002ஆம் ஆண்டு வாக்குகளைக் கண்டறிய முடியாத நிலை, இன்னும் ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு படிவமே சென்று சேராத நிலை, தமிழ்நாட்டிற்குத் தேவையற்ற 13 ஆவது ஆவணம் உள்ளிட்ட 13 ஆவணங்கள் பற்றிய தெளிவின்மை என பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும் உள்ளன. இந்நிலையில் இந்த சிறப்பு தீவிர சீராய்வுப் பணி அவசரக் கோலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொழிலாளர்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும், ஆன்-லைனில் மேற்கொள்ள இணையப் பிரச்சனை, மொழிப் பிரச்சனை, மற்றவர் உதவியை நாடவேண்டிய சூழல் என வாக்காளர்களிடம் மிகக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் போன்ற, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டத்தில், எஸ்.ஐ.ஆர் பணிகளை சரியான முறையில் நிறைவேற்றுவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவை.
ஒரு வீட்டில் குடியிருக்கும் தொழிலாளி வேலை நிலைமைக்கு ஏற்ப இரண்டொரு ஆண்டுகளில் வேறொரு பகுதிக்கு குடிபெயர்வது, திருப்பூரில் இயல்பாக உள்ள நிலைமை. அத்தகைய வாக்காளர்களைக் கண்டறிவதில் மிகுந்த சிரமம் உள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் வேறொரு வாக்குச்சாவடி உள்ள பகுதிக்கு குடிபெயர்ந்திருந்தால், அவரிடம் படிவத்தை கொடுக்க மறுப்பதும்; ஒரு வாக்காளருக்கு இரண்டு படிவங்களுக்குப் பதிலாக ஒரே படிவம் மட்டும் வழங்குவதும்; வாக்காளர் படிவத்தில் 2 மற்றும் 3 ஆம் பகுதிகளில் திருமணம் ஆன பெண்கள் 2002 வாக்காளர் பட்டியலில் தமது கணவர் பெயர் உள்ள நிலையில், தந்தையின் பெயரை எழுதச் சொல்வது; உறவு முறையை குறிப்பிடுவதில் குழப்பம்.
அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் தானடித்த மூப்பாக தேர்தல் ஆணையம் செயல்படுவது; பெரும்பாலான அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை மீறி எஸ்.ஐ.ஆரைத் திணிப்பது; மழைப் பொழிவுக் காலம்; வெளியூர் தொழிலாளர்கள், தங்கள் தொகுதியில் 2002 வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதற்கான ஏற்பாடுகள் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் எஸ்ஐஆர் பணிகள் தொடர்ந்து தொய்வாகவே இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, போர்க் காலத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளைப் போல, அனைத்து அரசுத் துறைகளும் இந்த ஒரே வேலையை மட்டுமே செய்து வருகின்றனர். மாவட்டத்தின் அனைத்துத் துறை அரசுப் பணியாளர்களும், திட்டப் பணியாளர்களும் கடைநிலை ஊழியர்கள் வரை முழுவதுமாக இந்த எஸ்ஐஆர் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் மக்களுடைய அன்றாட பிரச்சனைகளில் தலையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கிப் போய் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து கிடக்கிறது. எனவே, அவசரக் கோலத்தில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ளாமல் நிறுத்தி வைத்து, மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணிகளில் அரசு நிர்வாகம் ஈடுபட வேண்டும். மேலும், சரியான, முறையான வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியைத் திட்டமிட்ட முறையில், உரிய கால அவகாசம் வழங்கி மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.






