சசிகலா அரசியல் பிரவேசம்! தூக்கத்தைத் தொலைத்த தினகரன்.. அமமுக கூடாரம் காலியாகிறதா?
தமிழக அரசியல் களம் எப்போதுமே திருப்பங்களுக்குப் பஞ்சமில்லாதது. ஆனால், பிப்ரவரி 24-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி மண் கண்ட காட்சி, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஒரு புதிய திருப்பத்தின் தொடக்கப்புள்ளியாக மாறியிருக்கிறது. “களம் காண்போம்… அம்மாவின் ஆட்சி அமைப்போம்” என்ற முழக்கத்துடன், ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலா, தனது புதிய அரசியல் கட்சியின் கொடியை ஏற்றியிருக்கிறார்.
இந்தக் கொடியேற்றம் போயஸ் கார்டனில் இருந்து கிளம்பிய ஒரு கனல் என்றால், அதன் வெப்பம் எடப்பாடி பழனிசாமியை விட, சசிகலாவின் ரத்த சொந்தமான டிடிவி தினகரனைத்தான் அதிகமாகச் சுட்டெரிக்கத் தொடங்கியிருக்கிறது. “நெல்மணிகள் நிறைந்த தோட்டத்தில் சிலவற்றைச் சிட்டுக்குருவிகள் கொத்திச் செல்வதால் பாதிப்பு இல்லை” என்று தினகரன் மேலோட்டமாகச் சொன்னாலும், உள்ளுக்குள் அவர் ‘அலறிக்’ கொண்டிருக்கிறார் என்பதுதான் தற்போதைய நிதர்சனம்.
துரோகத்தின் ஈட்டி… சசிகலா ரத்தக் கண்ணீர்!
மாநாட்டு மேடையில் சசிகலா பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் எடப்பாடி பழனிசாமி மீதான கோபம், ஆதங்கம் தெறித்தது. எடப்பாடி பழனிசாமியின் பெயரைக்கூடச் சொல்லாமல் சசிகலா குறிப்பிட்ட விதம், ஒரு காலத்தில் தனது காலில் விழுந்தவர் இன்று கையை முறிக்கிறார் என்ற ஆதங்கத்தின் உச்சம்.
“நான் சிறைக்குச் சென்ற இரண்டு மாதத்திலேயே, தமிழக அமைச்சர்கள் அங்கு வந்தார்கள். சென்னை ஜெயிலுக்கு உங்களை மாற்றிவிடலாம் என்றார்கள். ஆனால் நான் வரவில்லை. ஒருவேளை நான் சென்னை சிறைக்கு வந்திருந்தால் இங்கே நான் பேசிக்கொண்டிருப்பேனா என்பதே கஷ்டம்” என்று அவர் சொன்னபோது, அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே ஒருவித அமைதி நிலவியது. அது ஒரு மரண பயத்தின் வெளிப்பாடு.
எடப்பாடி பழனிசாமி தரப்பு தன்னை எப்படியெல்லாம் முடக்கியது என்பதை அவர் வரிசையாகப் பட்டியலிட்டார். “தன்னை முதலமைச்சராக உட்கார வைத்தவரை, ஒரு பேப்பரைத் தூக்கிப் போடுவது போல எறிந்தால் எப்படி இருக்கும்?” என்ற அவரது கேள்வி, துரோகத்தின் வலியைச் சுமந்த ஒரு பெண்ணின் நேரடி வாக்குமூலமாகப் பார்க்கப்படுகிறது.
சிறைவாசத்தின் போது தனது கணவர் நடராஜனின் மரணத் தருவாயில் கூட, எடப்பாடி அரசு வெறும் 5 நாட்கள் மட்டுமே பரோல் கொடுத்து நெருக்கடி கொடுத்ததை சசிகலா விவரித்த விதம், கூடியிருந்த தொண்டர்களிடையே ஒருவித அனுதாப அலையை உருவாக்கியுள்ளது. “என் கணவர் உயிருக்குத் துடிக்கிறார், ஆனால் போயஸ் கார்டன் வீட்டுக்குச் செல்லக்கூடாது என்று நிபந்தனை போட்டார்கள். இப்படி பதவியில் உட்கார வைத்துவிட்டுப் போனவரை, எப்படியெல்லாம் ஈட்டியால் குத்துவார்களோ, அப்படியெல்லாம் குத்திவிட்டார்கள்” என்று அவர் கொதித்தபோது, அது எடப்பாடிக்கு எதிரான தார்மீகக் கோபமாக மாறியது.
“அவரை (எடப்பாடி பழனிசாமி) பொறுத்தவரை தொண்டர்களைப் பற்றி கவலையில்லை, தான்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்” என்ற குற்றச்சாட்டு, அதிமுகவின் ஜனநாயகத் தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தினகரனின் நடுக்கம்: காலியாகும் கூடாரம்?

சசிகலாவின் இந்தப் புதிய பாய்ச்சல், எடப்பாடியை விட தினகரனைத்தான் அதிக பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. இத்தனை காலம் ‘சின்னம்மா’வின் நிழலில் அரசியல் செய்துவிட்டு, தற்போது அவரை விட்டு விலகி, பாஜக கூட்டணியில் தன்னிச்சையாக ஐக்கியமான தினகரனுக்கு இப்போது தனது கோட்டை சரிவது போல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் பிளவுபடும் என்பதுதான் தினகரனின் பிரதான கவலை. “திடீர் சாம்பார், திடீர் இட்லி போல திடீர் கட்சிகள் வரலாம்” என்று தினகரன் நக்கல் அடித்தாலும், உண்மையில் அவர் தனது கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சசிகலா பக்கம் தாவி விடுவார்களோ என்று அஞ்சி நடுங்குகிறார். “99.1 சதவீத தொண்டர்கள் ஒன்றிணைந்துவிட்டனர்” என்று அவர் சொல்வது, உண்மையில் மீதமுள்ள அந்த 1 சதவீதத்தினர் யாராவது கிளம்பிப் போய்விடுவார்களா என்ற அச்சத்தின் வெளிப்பாடுதான்.
குடும்ப அரசியலின் உள்ளடி மோதல்கள் இப்போது தெருவுக்கு வந்துவிட்டன. ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற சசிகலாவின் விருப்பத்தைத் தட்டி கழித்த தினகரன், இப்போது சசிகலாவே நேரடியாகக் களமிறங்கியதால் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என நினைக்கிறார். “கடந்த 35 ஆண்டு காலமாக எனக்கு மட்டுமே தெரிந்த சில நபர்களின் உண்மை நிலை, இன்று தமிழக மக்களுக்கும் நன்றாகத் தெரியவந்துகொண்டிருக்கிறது” என்று தினகரன் சொல்லும் அந்த “நபர்கள்” சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்பதை அரசியல் நோக்கர்கள் எளிதில் புரிந்து கொள்கின்றனர்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

சசிகலா தனது உரையில் மீண்டும் மீண்டும் ஒன்றை வலியுறுத்தினார். “சட்டமோ அதிகாரமோ கொடுக்கிற தீர்ப்பை விட மக்கள் கொடுக்கிற தீர்ப்பு தான் மகத்தானது” – இது ஜெயலலிதா அடிக்கடி சொல்லும் மந்திரம். அதையே இப்போது சசிகலாவும் கையில் எடுத்துள்ளார். “எதிரிகளையும் துரோகிகளையும் வேரறுக்கின்ற ஒரு கட்சியாக இது செயல்படும்” என்று அவர் சூளுரைத்திருப்பது, வரும் தேர்தலில் அதிமுக வாக்கு வங்கியைப் பிரித்து, எடப்பாடி மற்றும் தினகரன் ஆகிய இருவருக்கும் ஒரு பாடத்தைப் புகட்டப் போகிறார் என்பதையே காட்டுகிறது.
தற்போது சசிகலா அறிமுகப்படுத்தியிருக்கும் “கறுப்பு-வெள்ளை-சிவப்பு” கொடி, அதில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மூவரின் உருவங்கள், இவையனைத்தும் அவர் தன்னை அதிமுகவின் உண்மையான வாரிசு என்று நிலைநிறுத்த முயற்சிப்பதைக் காட்டுகிறது. “அம்மா மேல தண்டனைன்னு சொன்னாலும், திருப்பி வெற்றி பெற்று வந்து ஜெயிச்சாங்க” என்று அவர் சொன்னது, தனது சிறைவாசத்திற்குப் பின்னரும் தான் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.
இந்த நம்பிக்கை எடப்பாடிக்கு ஒரு எச்சரிக்கை என்றால், தினகரனுக்கு அது ஒரு வாழ்வா-சாவா போராட்டத்தின் ஆரம்பம். அமமுக கூடாரம் காலியாகுமா அல்லது சசிகலாவின் இந்தப் புதிய கட்சி தேர்தலுக்கு முன்பே கவிழுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், தென் தமிழகத்தில் முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்யப் போவது ‘சித்தி’யா அல்லது ‘சித்தம்’ கலங்கியிருக்கும் ‘மகன்’ தினகரனா என்பதை காலம் தீர்மானிக்கும்.






