--- --:--:-- --

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு..!

2

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கான முன்பதிவு, பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக சபரிமலை ஐயப்பன் கோயில் விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்கச் செல்வார்கள். டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளன.

 

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியான இன்று மாலை 5 மணிக்கு, மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. வரும் 17 ஆம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. அன்று முதல் தினமும் 18 மணி நேரம் நடை திறந்திருக்கும். பக்தர்கள் வருகை அதிகரித்தால் இரவு தாமதமாக நடை அடைக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. நடப்பு மண்டல பூஜையையொட்டி சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் ஒன்றாம் தேதி வரை 22 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், நாள்தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. பம்பா, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார், சத்திரம் மற்றும் செங்கன்னூர் ஆகிய இடங்களில் ஸ்பாட் புக் செய்து பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்கலாம்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு வாரியம் விதித்துள்ளது. குறிப்பாக, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 18 ஆம் படிக்கு மேல் சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நிலக்கல், எருமேலியில் ஒரே நேரத்தில் 14 ஆயிரம் வாகனங்களை நிறுத்த பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாத பூஜை நாட்களில் பம்பையில் ஹில்டாப் மற்றும் ஜக்கு பாலம் பகுதியில் சிறிய வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த இரு இடங்களில் 2 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 18 ஆயிரத்து 741 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் இரவு நடை சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக 30 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. ஐயப்ப பக்தர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் இன்று முதல் ஜனவரி 16-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகளும், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

Right Menu Icon