--- --:--:-- --

காவேரி டெல்டாவாக அறிவிக்காவிட்டால் போராட்டம்

9

என்.எல்.சி உபரி நீர் செல்லும் பரவனாற்று வாய்க்காலை உடனடியாக தூர்வார வலியுறுத்தி பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் கடலூரில் பா.ம.க-வினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடலூரில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை காவேரி டெல்டா பகுதிகளுடன் இணைக்க விட்டால் பா.ம.க போராட்டம் நடத்தும் என சௌமியா அன்புமணி எச்சரிக்கை தெரிவித்தார்.

 

 

சுத்திகரிக்கப்படாமல் என்.எல்.சி நிறுவனம் உபரி நீரை வெளியேற்றுவதால் விவசாய நிலத்தில் கரி படிந்து விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளதாக விவசாயிகள் வேதனை. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராமத்தில் பரவலாற்று வாய்க்கால் அமைந்துள்ளது . இந்த வாய்க்காலை நம்பி மருவாய், நைனார்க்குப்பம், கல்க்குணம், அரங்கமங்கலம் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

 

இந்த நிலையில் ஏரியின் வழியாக நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சென்று வருகிறது. ஏரி முழுவதும் செடி கொடிகள் நிறைந்து புதர் மண்டி காட்சியளிப்பதால் உபரி நீர் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் சிறிது மழை பெய்தாலே ஏறி நிரம்பி வயலில் தண்ணீர் வந்து விடுவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.

 

இந்த நிலையில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் ஏராளமான பாமகவினர் பரவனாற்று வடிகால் பகுதியில் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர் மேலும் கையில் பதாகைகளை ஏந்தியவாறு சௌமியா அன்புமணி தலைமையில் தமிழக அரசை கண்டித்தும் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்தும் ஏரியை தூர்வார வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர் .

 

இந்த போராட்டத்தின்போது, காவேரி டெல்டா கடைமடை பகுதிகளான மருவாய், நயினார்க்குப்பம் கல்க்குணம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை காவேரி டெல்டா பகுதிகளுடன் இணைத்து காவேரி டெல்டா பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என சௌமியா அன்புமணி வலியுறுத்தினார்.

மேலும், என்.எல்.சி நிறுவனம் சுரங்க தண்ணீரை சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றுவதால் விவசாய நிலங்களில் கரி படிந்து விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளதாகக் கூறிய சௌமியா அன்புமணி, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஏரியை தூர்வாரி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், திரளாக விவசாயிகள், பா.ம.க-வினர் பங்கேற்றனர்.

காவேரி கடைமடை பகுதிகளை காவேரி டெல்டா பகுதிகளாக அறிவிக்காவிட்டால் பாமக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார்

Right Menu Icon