சாதிவாரி கணக்கெடுப்பு கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த போராட்டம் ஒத்திவைப்பு..!
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்த போராட்டம் டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த சாதியின் மக்கள் தொகைக்கு ஏற்ப, இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதுவரை, இடைக்கால தீர்வாக, வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கோரி டிசம்பர் 5 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த அறவழிப்போராட்டம் டிசம்பர் 12 ஆம் தேதி நடத்தப்படும் என ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் எதிரே போராட்டம் நடைபெறும் என்றும், இதில், அனைத்து சாதியினரையும் ஒன்றிணைக்க பாமகவினர் தேனீக்களை போல சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதியின் மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க கோரியும், அதுவரை இடைக்கால தீர்வாக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கோரியும் வருகின்ற 5.12.2025-ல் நடத்த திட்டமிடப்பட்ட அறவழி ஆர்ப்பாட்டம் 12.12.2025-ல் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.






