--- --:--:-- --

தமிழகத்தில் ஓவைசி போட்டி? ராமநாதபுரத்திற்கு குறிவைக்கும் ஏஐஎம்ஐஎம் கட்சி.. வாக்குகள் பறிபோய்விடுமோ என திமுக கலக்கம்..!

1

தேர்தல் வியூகங்கள் எப்போதும் சத்தமில்லாமல் அரங்கேறும் ஆட்டம்தான். ஆனால், ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசியின் ‘அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன்’ (AIMIM) கட்சி, தமிழகத்தில் அடியெடுத்து வைக்கப் போவதாக வெளியிட்டிருக்கும் தகவல், ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் உற்று நோக்க வைத்திருக்கிறது. குறிப்பாக, இஸ்லாமிய வாக்குகளின் மையப்புள்ளியாகக் கருதப்படும் ராமநாதபுரம் போன்ற தொகுதிகளை குறிவைப்பதாக வரும் செய்திகள், திமுகவின் சீனியர் தலைவர்களைக் கடும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது!

 

ஏஐஎம்ஐஎம் கட்சி, தெலுங்கானா மற்றும் ஆந்திராவைத் தாண்டி, பிற மாநிலங்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கிறது. சமீபத்திய பீகார் சட்டமன்றத் தேர்தல்தான் அந்தக் கட்சியின் பலத்தை இந்திய அளவில் கவனிக்க வைத்தது.

 

பிரதமர் மோடி-நிதீஷ் குமாரின் கூட்டணி அபார வெற்றி பெற்ற அந்தத் தேர்தலில், ஓவைசியின் கட்சி ஐந்து இடங்களில் வென்று, தன்னை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளாத கட்சிகளுக்குப் பாடம் புகட்டியது. பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஓவைசி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மெகா கூட்டணியில் சேர முயன்றார்.

 

ஆனால், புறக்கணிக்கப்பட்டதால் தனித்துப் போட்டியிட்டார். இவரால் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறியது, இறுதியில் பாஜக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துவிட்டது என்ற விமர்சனம் இருந்தாலும், ஓவைசி தனது வெற்றியைப் பதிவு செய்து, அரசியல் அரங்கில் தனது இருப்பை உறுதிப்படுத்தினார்.

 

பீகார் வெற்றி தந்த நம்பிக்கையில், அசாதுதீன் ஓவைசி இப்போது தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் களமிறங்கத் திட்டமிட்டிருக்கிறார். இரண்டு பிரதான திராவிடக் கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில், ஓவைசியின் இந்த நகர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், “இப்படித் தப்புக் கணக்குப் போட்டுத்தான் பீகாரில் எதிர்க்கட்சிகள் மண்ணைக் கவ்வியுள்ளனர்” என்கிறது ஏஐஎம்ஐஎம் வட்டாரம்.

 

அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஒரு இஸ்லாமியர்களின் கட்சி. இஸ்லாமிய சமூகத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் அவர் ஆக்ரோஷமாகப் பேசுகிறார். பாஜகவின் திட்டங்களை அவர் கடுமையாக விமர்சிப்பதால், முஸ்லீம்கள் பலரும் ஓவைசியை ஒரு வலுவான, நம்பகமான தலைவராகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த மக்கள் நம்பிக்கையை உணர்ந்தே, ஓவைசி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கால் பதிக்க முடிவு செய்துள்ளார்.

 

ஏற்கெனவே, தமிழகத்தில் களமிறங்கிக் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ள வரலாறும் இவருக்கு உண்டு. 2016 சட்டசபைத் தேர்தலில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுச் சில ஆயிரம் வாக்குகளை பெற்றது ஓவைசியின் கட்சி.

 

கடந்த 2021 சட்டசபைத் தேர்தலிலும் சில தொகுதிகளில் ஓவைசி கட்சி களமிறங்கினாலும் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், வாக்கு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டே இருந்தது. அடுத்த ஆண்டே அதாவது 2022ஆம் ஆண்டு நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலில் ஓவைசி சில வார்டுகளில் வேட்பாளர்களை களமிறக்கினார். இதில், வாணியம்பாடி நகராட்சியின் 19வது வார்டில் வெற்றிக்கொடி நாட்டி, தமிழக அரசியல் களத்தில் தன்னால் சாதிக்க முடியும் என்பதை ஓவைசி நிரூபித்தார்.

 

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வேலூர், ராணிப்பேட்டை, மற்றும் முக்கியமாக ராமநாதபுரம் உள்ளிட்ட முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் சுமார் 25 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த ஏஐஎம்ஐஎம் கட்சி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஓரிரு வாரங்களில் தமிழகம் வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஓவைசி ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறாராம்.

 

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போன்ற இஸ்லாமியக் கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கூட்டணியின் பலமே, சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை அப்படியே தக்கவைப்பதுதான். இந்தச் சூழலில், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு, சிறுபான்மையின வாக்குகளைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டால், அது திமுக கூட்டணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் சீனியர் தலைவர்கள் கவலையில் உள்ளனர்.

 

குறிப்பாக, வேலூர், ராமநாதபுரம் போன்ற தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் இஸ்லாமிய வாக்குகளை ஓவைசி பிரித்தால், மொத்த வெற்றியின் சமன்பாடே மாறிவிடும் என்ற அச்சம் வலுக்கிறது.

 

ஆனால், திமுகவின் இன்னொரு தரப்பினர், ஓவைசியின் வருகையை லேசாகவே எடுத்துக்கொள்கின்றனர். “பரம்பரை பரம்பரையாக திமுகவுக்கு இருக்கும் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை யாராலும் அபகரிக்க முடியாது” என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 

இதற்கு அவர்கள் சுட்டிக்காட்டும் முக்கியக் காரணம்: ஓவைசியைப் பல அரசியல் கட்சிகள் ‘பாஜகவின் B டீமாகவே’ பார்க்கின்றன. அதாவது, ஏஐஎம்ஐஎம் ஒரு இஸ்லாமியக் கட்சியாக இருந்தாலும், அது பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்குள் வராமல் தனித்துப் போட்டியிடுவதால், சிறுபான்மையினரின் வாக்குகளைச் சிதறடித்து, மறைமுகமாக பாஜகவின் வெற்றிக்கு உதவுவதே நோக்கம் என்ற குற்றச்சாட்டை திமுக முன்வைக்கிறது.

 

இந்த ‘B டீம்’ முத்திரையை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று, ஓவைசியின் போட்டியை வீழ்த்துவோம் என்று திமுகவினர் உறுதியாகத் தெரிவிக்கிறார்கள். ஆனாலும், ஓவைசி போன்ற உணர்ச்சிபூர்வமான தலைவர், தான் போட்டியிடும் தொகுதிகளில் நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், அது திமுகவின் வாக்கு வங்கிக்குக் கட்டாயம் சவால்தான்.

 

திராவிடக் கோட்டையில் ஓவைசியின் அஸ்திரம் பாயுமா அல்லது ‘B டீம்’ விமர்சனத்தில் அந்த முயற்சி கரைந்துபோகுமா? எது எப்படியானாலும், வரும் சட்டமன்றத் தேர்தல் களத்தில், ஓவைசி கட்சி களமிறங்கி, அரசியல் ஆட்டத்தை தொடங்கினால், ராமநாதபுரம் போன்ற தொகுதிகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.

Right Menu Icon