பிரதமராக இன்று பதவியேற்கும் நரேந்திர மோடி..!
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று பதவியேற்க உள்ளார். தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளைத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை மின்னொளி அலங்காரங்களால் ஜொலிக்கிறது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து, இன்று பிரதமர் பதவியேற்பு விழா அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து முடிந்துள்ளன.
இரவு 7.15 மணிக்கு விழா தொடங்கியதும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பிரதமராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். பதவியேற்பு விழாவுக்குப் பிறகு விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை சமையலறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு உணவுகள் விருந்தளிக்கப்படும்.





