ஆளுநரின் ஒப்புதலின்றி தன்னை விடுவிக்க உத்தரவிட கோரி நளினி மனு
ஆளுநரின் ஒப்புதல் இன்றி தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுவிக்கும் தமிழக அரசின் தீர்மானத்தில் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இதனால் சட்ட விரோத காவலில் வைத்து இருப்பதாக கருதி தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டிருக்கும் நிலையில் புதிய மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதில் தமிழக அமைச்சரவையில் தீர்மானத்தை ஆளுநர் ஏற்காதது சட்டவிரோதம் என்று அறிவிக்கவும் ஆளுநரிடம் ஒப்புதலின்றி தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரியுள்ளார்.
ஆளுநர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அமைச்சரவை முடிவு ஆளுநரை கட்டுப்படுத்தும் என்றும் ஆளுநருக்கு என தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்றும் மாருராம் என்பவரது வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நளினி சுட்டிக்காட்டினார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.






